லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலத்தில்,தேசிய குடிமக்கள் பதிவேடு(என்.ஆர்.சி) நடைமுறைப்படுத்தப்பட்டால், முதலில், யோகி ஆதித்யநாத் தான் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டியது இருக்கும் என்று அகிலேஷ் தெரிவித்துள்ளார்.
அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (The National Register of Citizens -NRC) இறுதிப் பட்டியல் கடந்த செப்டம்பர் 1 அன்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில், அசாமைச் சேர்ந்த 19 லட்சம் பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை. அதாவது, பெயர் விடுபட்ட 19 பேரும் இந்திய குடிமக்கள் அல்ல என்றும், அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இதற்கு எதிராக அம்மாநில மக்கள் தற்போது வரை போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இதனிடையே, ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, உள்துறை அமைச்சர் அமித் ஷா, “விரைவில் நாடு முழுவதற்குமே தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டுவரப்படும்” என்றுஅறிவித்தார். அதற்கு முட்டுக் கொடுக்கும் வகையில், “தேவைப்பட்டால் உத்தரப் பிரதேசத்திலும்என்.ஆர்.சி.யை அமல்படுத்துவோம்” என்று அம்மாநில பாஜக முதல்வரும் சாமியாருமான ஆதித்யநாத் தெரிவித்தார்.இந்நிலையில்தான், “உத்தரப்பிரதேசத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டுவருவது தேவையற்ற ஒன்று. இது மக்களைப் பிளவுபடுத்தும். ஒருவேளை உத்தரப் பிரதேசத்தில் என்.ஆர்.சி. கொண்டுவந்தால் முதல்வர் யோகி ஆதித்யநாத்துதான், முதலில் தனது சொந்த மாநிலமான உத்தரகண்டிற்கு திரும்பிச் செல்லவேண்டியிருக்கும். ஏனெனில் உத்தர்கண்டை பூர்வீகமாகக் கொண்டவர் அவர்.” என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கூறியுள்ளார்.