politics

img

உணர்ச்சியையும் புரட்சியையும் உணர்த்துவதே சிவப்பு நிறம்...பாஜக-வினருக்கு பாடமெடுத்த அகிலேஷ்...

ஜான்சி:
உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் ‘சிவப்பு தொப்பி’ அணிவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவர் மட்டுமன்றி, சமாஜ்வாதி கட்சியினரும் சிவப்புநிறத் தொப்பியை தங்களின் அடையாளமாக கடைப்பிடிக்கின்றனர்.

இதனை உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் அண்மையில் விமர்சித்திருந்தார். சட்டப்பேரவையிலேயே கேலியும் செய்திருந்தார். இதற்கு தற்போது உ.பி. மாநிலம் ஜான்சி நகரில் அளித்த பேட்டியின்போது, அகிலேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.அதில், “சட்டப்பேரவையில் நாங்கள் அணியும் தொப்பி குறித்து முதல்வர் ஆதித்யநாத் பேசுகிறார். ஆனால், நாங்கள் அணியும் சிவப்பு நிறத் தொப்பி, புரட்சியையும், ரத்தத்தையும், உணர்ச்சிகளையும் காட்டுகிறது. ஆதித்யநாத்தோ எந்த உணர்வுகளும் இல்லாதவர்” என்று கடுமையாக சாடியுள்ளார்.மேலும், ‘கறுப்பு இதயம்’ உள்ளவர்கள், ‘கறுப்பு தொப்பி’ அணிகிறார்கள் என நாங்கள் ஒருபோதும் கூறியதில்லை என்று ஆதித்யநாத் சார்ந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும் தாக்கியுள்ளார். வெள்ளைச் சட்டை, காக்கி பேண்ட்; தலையில் கறுப்புத் தொப்பி... ஆர்எஸ்எஸ் சீருடை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, “மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத நிலையில், பாஜக அரசு வலுக்கட்டாயமாக வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. பாஜக ஜனநாயகத்தைக் கொலை செய்கிறது. உத்தரப்பிரதேச மேலவையில் சமாஜ்வாதிக் கட்சிக்குப் பெரும்பான்மை இருந்தும், அரசு அதை புறக்கணிக்கிறது” என்றும் அகிலேஷ் குற்றம் சாட்டினார்.