கோயில்களில் கோழி, ஆடுகளை பலிகொடுக்க திரிபுரா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதோடு முக்கியமான கோயில்களில் சிசிடிவி கேமரா வைத்து இதைக் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
திரிபுராவில் பிரசித்தி பெற்ற மாதா திரிபுரேஸ்வரி கோயிலில் பலிகொடுப்பதற்காக அம்மாநில அரசு தினமும் ஒரு ஆட்டை கோயில் நிர்வாகத்திற்கு வழங்கி வருகிறது. அரசின் இந்த செயல்பாட்டை இதை எதிர்த்து வழக்கறிஞர் சுபாஷ் பட்டாச்சார்ஜி என்பவர் திரிபுரா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், நீதிபதி அரிந்தம் லோத் ஆகியோர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் தீர்பளித்த நீதிபதிகள் ’’கோயில்களில் பலியிட ஆடுகளை வழங்க அரசு பணம் கொடுப்பதற்கு இந்திய சட்டத்தில் இடமில்லை. உயிர்ப்பலிகளை அரசு தடுக்க வேண்டுமே தவிர, அரசே அதைச் செய்யக்கூடாது.
இனி மாநிலத்தில் எந்த இந்து கோயில்களிலும் கோழி, ஆடு உள்ளிட்ட விலங்குகளை பலியிட தடை விதிக்கிறோம். விலங்குகளை கோயில்களுக்கு உயிரோடு தத்துக் கொடுக்கலாமே தவிர பலியிட அனுமதியில்லை. இதை உள்துறை செயலாளர் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், முக்கியமான கோயில்களில் சிசிடிவி கேமரா வைத்து இதைக் கண்காணிக்க வேண்டும். மாவட்ட போலீஸ் அதிகாரிகள் இதை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த 2003-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, கோவில்களில் மிருகங்கள் மற்றும் பறவைகளை பலியிடுவதற்கு தடை விதிப்பதாகவும், மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டார். ஆனால், எதிர்ப்புகள் வலுத்து வந்த நிலையில், அந்த உத்தரவை வாபஸ் பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.