திருச்சி, ஜன.11-
மத்திய, மாநில அரசை கண்டித்து திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற உள்ள அஞ்சலக கணக்கர் தேர்வில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்ற அஞ்சல்துறையின் அறிவிப்பினைக் கண்டித்தும், தமிழில் தேர்வு நடத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு அஞ்சல்துறை தேர்வு விண்ணப்ப படிவத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் இந்தி திணிப்பை ஏற்படுத்தும்வகையில் வருகிற பிப்ரவரி 14ஆம்தேதி நடைபெறும் தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்றும், பிரதமர் தமிழில் திருக்குறள் பேசுவது முக்கியமல்ல தமிழில் தேர்வு நடத்துவதுதான் முக்கியம். தமிழ் மக்கள்மீது பற்று இருந்தால் மத்திய அரசிடம் போராடி மத்திய அரசுப் பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கவும், தமிழில் தேர்வு எழுதவும் எடப்பாடி அரசு உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
இதில் மாநில இணைச்செயலாளர் சி.பாலசந்திரபோஸ், மாவட்ட செயலாளர் பா.லெனின், மாவட்ட தலைவர் எஸ்.சுரேஷ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.