மண் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை, ஜூலை 8- மண் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காத வருவாய்த்துறை மற்றும் காவல்துறையைக் கண்டித்து, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா, கைக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட விஜயரெகுநாதபுரம் கிராமத்தில் உள்ள மூங்கில் கண்மாயில் உள்ள மண்ணை வெட்டி எடுத்து வெளியே கொண்டு சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத வருவாய்த்துறை மற்றும் காவல்துறையைக் கண்டித்தும், மேற்படி மண்கொள்ளையைத் தட்டிக்கேட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் துரை.பாண்டியனுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் திருவரங்குளம் மேற்கு ஒன்றியச் செயலாளர் எல். வடிவேல் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். பாண்டிச்செல்வி, ஆலங்குடி நகரச் செயலளாளர் ஏ.ஆர். பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி கண்டன உரையாற்றினார். அவர் பேசும்போது, மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் சுற்றுச்சூழல் அணி என்று கட்சியில் ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆற்று மணல் தினந்தோறும் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதனால், நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினருக்குத் தெரியாமல் கனிமவளக் கொள்ளை நடப்பதில்லை. இங்கே, ரெகுநாதபுரம் மூங்கில் ஊரணியின் கரையை பலப்படுத்த வேண்டுமென்றால் நூறுநாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களிடம் அதை ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், ஜேசிபி எந்திரத்தை வைத்து மண்ணை அள்ளி வெளியே கொண்டு சென்றுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகள் இந்த அரசின் மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும். எனவே, மண்கொள்ளையர்கள் மீது பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கட்சித் தோழர் துரை.பாண்டியனுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் இதை மாநில அளவிலான போராட்டமாக நாங்கள் முன்னெடுப்போம் என்றார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி. சுசிலா, எஸ். பாண்டிச்செல்வி, ஒன்றியக்குழு உறுப்பினர் துரை.பாண்டியன் ஆகியோர் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.மதியழகன், துரை.நாரயணன், கி.ஜெயபாலன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆ.குமாரவேல் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.