tamilnadu

img

சிறு தொழில் மற்றும் சிறிய கடைகளுக்கும் கட்டாய உரிமம் - மறுபரிசீலனை செய்ய சிபிஎம் கோரிக்கை!

கட்டாய உரிமம் எனும் உத்தரவால் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான ஏழை எளிய மக்களின் வாழ்நிலையும் பொருளாதாரமும் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து வணிகம் வழங்குவதற்கான விதிகள் 2025 அரசு ஆணையின் படி, தமிழகத்தில் கிராம ஊராட்சிகளில் 48 வகையான சிறு தொழில்கள் மற்றும் 119 வகையான சேவைத்தொழில்களில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் இனி தங்கள் தொழிலை தொடர வேண்டுமெனில் கண்டிப்பாக உரிமம் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெரும் நிறுவனங்கள் முதல் சிறிய பெட்டிக்கடைகள் வரை அனைத்து தரப்பினருக்கும் இனிமேல் உரிமம் கட்டாயம் எனும் இத்தகைய அரசின் உத்தரவால் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான ஏழை எளிய மக்களின் வாழ்நிலையும் பொருளாதாரமும் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகும்.

தமிழ்நாட்டில் கிராமப்பகுதிகளில் போதுமான வேலைவாய்ப்பு இல்லாத சூழலில், தங்கள் வாழ்வாதார தேவைகளுக்காக பெரும் பகுதி மக்கள் சிறு கடைகளை வைத்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் பெரும்பாலான கடைகள் சிறிய பெட்டிக்கடைகளாகவோ அல்லது வீடுகளின் முன்புறத்திலோ தான் அமைந்திருக்கின்றன. இவர்களின் மிகக்கணிசமானோர் தனிப்பெண்களாகவும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களாகவும், உடல் உழைப்பு செலுத்த முடியாத வயதானவர்களாகவுமே இருக்கின்றனர். இவர்களால் நடத்தப்படும் சிறு கடைகளுக்கும் கூட ரூ.250/-லிருந்து ரூ.30,000/- வரையில் உரிம கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது அவர்களின் வாழ்க்கையும் வாழ்வாதாரத்தையும் முற்றாக பாதித்து விடும்.

எனவே, பெரும் முதலீட்டில் துவங்கப்பட்டுள்ள தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் நீங்கலாக சிறிய கடைகள் மற்றும் சிறிய அளவிலான சுயதொழில்களுக்கு கட்டாய உரிமம் என்பதை தமிழக அரசு முற்றிலுமாக தவிர்த்து அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முன்வர வேண்டுமெனவும், அதற்கேற்ற வகையில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையில் உரிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.