பொன்னமராவதி, ஜூலை 13- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பாக காவல்துறை சார்பில் ஹெல்மெட் அணிவது அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு லட்டு கொடுத்தும், ஹெல்மெட் அணியாமல் வந்தவருக்கு, எமன் வேடம் அணிந்த ஒருவர், பாச கயிறு கட்டி இழுக்கும் நூதன பிரச்சாரமும் நடைபெற்றது. பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார், காவல் ஆய்வாளர் கருணாகரன், உதவி ஆய்வாளர்கள் பிரபாகரன், தங்கராஜ், மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற வாகன தணிக்கையில் தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகள் மீது சுமார் 500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.