சீர்காழி, மே 7-நாகை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் சீர்காழி ஆகிய இரண்டு ஒன்றியங்களைச் சேர்ந்த கிராமங்களில் காலியாக இருந்த 21 கிராம உதவியாளர் பணியிடங்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நிரப்பப்பட்டன. இதில் முறையான நேர்முகத் தேர்வு நடைபெறவில்லை. இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை. ஒரு தலைபட்சமாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கொள்ளிடத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் மற்றும் சம்பந்தம் ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவித்தனர்.இந்நிலையில் கொள்ளிடம் அருகே கண்ணுக்கினியனார் கோயில் கிராம முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ஜானகிராஜ் துரை, 21 கிராம உதவியாளர் பணி நியமனம் குறித்த விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் கடந்த மார்ச் 5-ந் தேதி மனு செய்திருந்தார். ஆனால் 2 மாதம் ஆகியும் தகவல் தராததால் சீர்காழி தாசில்தார் அலுவலகம் முன்பு வரும் மே 9-ந் தேதி 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களுடன் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாகவும், இதற்கு அனுமதி கோரி சீர்காழி டிஎஸ்பியிடம் மனு கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.