தஞ்சாவூர், மே 8-தஞ்சையில் தமிழக தொழிலாளிவர்க்கத்தின் ஒப்பற்ற தலைவர் தோழர் வி.பி.சிந்தன் நூற்றாண்டு நினைவு தினம், தமிழ்நாடு மருந்துவிற்பனை பிரதிநிதிகள் சங்க 53-வது ஆண்டு அமைப்பு தினத்தையொட்டி ரத்த தான முகாம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க, தஞ்சை மாவட்டச் செயலாளர் கே.பாலமுருகன் தலைமை வகித்தார். சிஐடியு தஞ்சை மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் ரத்ததான முகாமை துவக்கி வைத்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் எம்.குருசாமி, சிஐடியு மாவட்ட துணை செயலாளர்கள் கே.அன்பு, எஸ்.செங்குட்டுவன், தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.முருகேசன், துணைச் செயலாளர் எம்.ராமச்சந்திரன், பொருளாளர் ஜி.கார்த்திகேயன்,முறை சாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், அரசுப் போக்குவரத்து மத்திய சங்க துணை செயலாளர் எஸ்.ராமசாமி, தலைவர் முருகன்மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் க.வீரையன், பொருளாளர் மதியழகன், துணைச் செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் கொடையாளர்கள் மூலம் பெறப்பட்ட 50 யூனிட் ரத்தம் தஞ்சை அரசு ராசாமிராசுதார் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. முன்னதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை மற்றும் ஜெபமாலைபுரம் அரசுப் போக்குவரத்து கழக பணிமனை ஆகிய இரு இடங்களில் அலங்கரிக்கப்பட்ட தோழர் வி.பி.சிந்தனின் படத்திற்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது.