நாகர்கோவில், ஏப்.27-பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில்ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. சம்பளம் கேட்டு தொடர் போராட்டங்கள் நடத்தியும்அரசும், பிஎஸ்என்எல் நிர்வாகமும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்தும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 4 மாத சம்பளம் வழங்க வலியுறுத்தியும் பிஎஸ்என்எல் ஊழியர்சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.சுயம்புலிங்கம் தலைமை வகித்தார். அகில இந்திய உதவி செயலாளர் சி.பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் எ.செல்வம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பி.ராஜூ, மாவட்ட தலைவர் கே.ஜார்ஜ், மாநில உதவி செயலாளர் பி.இந்திரா ஆகியோர் பேசினர். இதில் ஒப்பந்த தொழிலாளர்கள், பிஎஸ்என்எல் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.