ஆம். இந்த மே தினம் வழக்கமான மே தினமாக இல்லை தான்.மார்க்சிஸ்ட் கட்சியின் இரண்டு பெண்கள் கிளைகள் உள்ள அம்பாசமுத்திரம் நகரம், சுப்பிரமணியபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் மரக்கம்பில் தான் கொடியேற்றுவோம். இந்த முறை சந்திரா அக்காவின் உதவியால் இரும்பு கம்பம் தயார் செய்ய முடிந்தது. கம்பத்தை ஊன்றுவதற்கு அந்தப் பகுதியில் வசிக்கும் பாலகிருஷ்ணன் அண்ணன் செங்கல்லும்,ராசாத்தி அக்கா ஜல்லியும், லெட்சுமி மணலும், நான் சிமெண்டும் கொடுக்க “கம்யூனிஸ்டுகள் மக்களுக்கு எவ்வளவோ செய்யறீங்க உங்களுக்கு நான் கொடி கம்பம் ஊன்றி கட்டிக்கொடுக்கிறேன்” என உடலுழைப்புத் தந்து கொடிகம்பத்தை வைத்துக் கொடுத்தார் கட்டுமானத் தொழிலாளி ரவி.அவருடன் சேர்ந்து உதவினார்கள் இளைஞர்களான மரியசெல்வமும், சின்னசெல்வமும்.
பீடித்தொழிலாளர்களான சுப்பக்கா, ஜெயக்கொடி, சுகன்யா, செல்வியக்கா இவர்களுடன் ஊரிலிருந்து அம்மா வீட்டிற்கு வந்துள்ள கற்பகவல்லியும் மே தின செலவுகளில் எங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று தாங்களாக முன்வந்து ரூ 10/- லிருந்து 50/- வரை கொடுத்தார்கள்.
இன்று காலையில் பூபதி தோழர் கம்பத்தைச் சுற்றி அழகாய் கோலம் போட, அருமையான பாயாசம் தயார் செய்தார் தோழர் லட்சுமி .
சமீபத்தில் தன் மகளுக்கு திருமணம் முடித்திருந்த ருக்மணி அக்கா ஒரு பெரிய பானை நிறைய மொறுமொறுப்பான மறுவீட்டு முறுக்கை மே தின நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கொடுக்கச் சொல்லி மனமுவந்து கொடுத்தார்.இந்தப் பெருமிதத்தோடு காலை 8 மணிக்கு நான் கொடியேற்ற இந்த உழைப்பாளிகளின் உணர்வோடு உயர்ந்தது செங்கொடி. மேலும் இந்த மே தினத்தில் பீடித்தொழிலாளர்களின் இலை முதலிய பிரச்சனைகளிலும், பகுதி மக்களின் முன்னுரிமை பிரச்சனைகளிலும் தலையீடு செய்து தீர்வு அல்லது முன்னேற்றம் காண்பது என கட்சித் தோழர்களோடு பங்கேற்ற மக்களும் இணைந்து சபதமேற்று நிகழ்ச்சியை நிறைவுசெய்தோம்.
ஆம். இந்த மே தினம் வழக்கமான மே தினமாக இல்லை தான்.
சு.ஜெகதீசன்