தஞ்சாவூர் ஏப்.28-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கயிறு உற்பத்தி தொழிற்சாலைகள் கஜா புயலின் தாக்குதலால் முற்றிலும் பாதிக்கப்பட்டு 5 மாதங்களாக மூடிக் கிடக்கின்றன. இதனால் பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அரசு நிவாரணம் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி கஜா புயல் டெல்டா மாவட்டங்களை கடுமையாக தாக்கியது. இதில் தஞ்சை பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மதுக்கூர், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான தென்னை, வாழை மரங்கள், வீடுகள், கடற்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகள் சேதமடைந்தன. மேலும் ஆயிரக்கணக்கான ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள், மனித உயிரிழப்பும் ஏற்பட்டது. தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய போதிலும் அது அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையவில்லை. மேலும், போதுமான அளவு நிவாரணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை கிடைக்க வில்லை. இதனால் தஞ்சை மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழில்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு, பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு பேரிழப்பை ஏற்படுத்தியது. கயிறு உற்பத்தி தொழில், கீற்று முடைதல், தேங்காய் மட்டை உரித்தல் உள்ளிட்ட தென்னை சார்ந்த உற்பத்தி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதியில் 180-க்கும் மேற்பட்ட கயிறு உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இங்கு தயார் செய்யப்பட்ட கயிறு மற்றும் பித்து பிளாக்குகள் சீனா, ஸ்பெயின், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதனால் ஏராளமான அன்னிய செலவாணி கிடைத்து வந்தது. மேலும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைத்து வந்தது. தற்போது கஜா புயலால் இப்பகுதியில் உள்ள அனைத்து கயிறு தொழிற்சாலைகளும் முற்றிலுமாக சேதமடைந்தன. ஆனால் இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. இங்குள்ள கயிறு தொழிற்சாலைகள் சாதாரணமாக ரூபாய் 20 லட்சம் முதல் 1.5 கோடி ரூபாய் வரை முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டவை. புயல் காரணமாக இந்த தொழிற்சாலைகளில் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கு அரசு தரப்பில் நிவாரணம் வழங்கப்படாதது, கயறு தொழிற்சாலை உரிமையாளர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து காயர் மற்றும் காயர் புராடக்ட்ஸ் தொழிற்சாலை உரிமையாளர் சங்க தலைவர் அக்ரி ஜி.கோவிந்தராஜ், செயலாளர் இரா.வெங்கடேசன், பொருளாளர் கே. அப்துல் முத்தலிப் உள்ளிட்டோர், தமிழக முதல் அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், தமிழக அரசு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மீண்டும் தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்டவை கோரப்பட்டுள்ளது.