புதுதில்லி, மே 8-மேற்கு வங்கத்தில் ஊடகவியலாளர்கள் திரிணாமுல்காங்கிரஸ் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ள சம்பவங்களுக்கு, பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைஎடுத்திட வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளார்கள்.தலைநகர் புதுதில்லியில் இயங்கிடும் இந்திய மகளிர் பத்திரிகையாளர் அணி, பிரஸ் அசோசியேஷன், தெற்கு ஆசிய மகளிர் ஊடகவியலாளர்கள், இந்தியா என்னும் பத்திரிகையாளர் சங்கங்கள் இணைந்து கூட்டாக ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:மேற்கு வங்கத்தில் மே 6 அன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் 5ஆவது கட்ட வாக்குப்பதிவின்போது, செய்திகள் சேகரிக்கச் சென்ற நியூஸ்எக்ஸ், ஏபிபி ஆனந்தா, ஜீ நியூஸ், சங்க்பாத் பிரதிதின் ஆகிய ஊடகங்களில் பணியாற்றும் ஆண் – பெண்செய்தியாளர்கள் பலர் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் என்று கூறப்படுபவர்களால் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.பேச்சுரிமை அரசமைப்புச்சட்டத்தின்கீழ் புனிதமான ஒன்றாகும். நாட்டின் ஜனநாயக நடைமுறையில் ஊடகங்கள்மிகவும் முக்கியமான பகுதியாகும். இவ்வாறு ஊடகவியலாளர்களைத் தாக்கிய குண்டர்கள்மீது தேர்தல் ஆணையமும் மற்றும் இதர அதிகாரக் குழுமங்களும் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். அடுத்து நடைபெறக்கூடிய இரு கட்டவாக்குப்பதிவுகளின் போதும் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட உத்தரவாதம் அளித்திட வேண்டும். ஏனெனில் அப்போதுதான் ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சிகளின் குண்டர்களிடமிருந்து தாக்குதல்களுக்கு உள்ளாகாமல், தங்கள் கடமையைச் செவ்வனே ஆற்றிட முடியும்.இவ்வாறு பத்திரிகையாளர் சங்கங்கள் அந்த அறிக்கையில் கோரியுள்ளன. இந்த அறிக்கையில் இச்சங்கங்களின் சார்பில் ஜோதி மல்கோத்ரா, வினிதா பாண்டே, ஜெய்சங்கர் குப்தா மற்றும் ஸ்வாதி பட்டாச்சார்ஜி ஆகியோர் கையொப்பமிட்டிருக்கிறார்கள். (ந.நி.)