india

img

குளிர் காலத்தில் மது அருந்த வேண்டாம்.... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை....

தில்லி உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு குளிர் அலை நிலவும் எனவும் வெப்பநிலை மிகவும் குறையக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வானிலை ஆய்வுத் துறை ஏன் இத்தகைய எச்சரிக்கையை அளிக்கிறது என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து விளக்கமளித்த மையத்தின் தலைவர் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா, “மருத்துவ நிபுணர்கள் இதுகுறித்து ஆராய்ச்சி செய்துள்ளனர். அதன்அடிப்படையிலேயே, வானிலை ஆய்வுமையம் இந்த எச்சரிக்கையை வெளியிடுகிறது” என்றார்.பத்து டிகிரி முதல் மைனஸ் இருபது, முப்பது டிகிரி வரை வெப்பநிலை மிகக் குறைவாக இருக்கும் பல நாடுகள் உலகில் உள்ளன. ஆனால் அங்கெல்லாம் அதிக அளவில் மது அருந்தப்படுகிறது.

மது அருந்துவதால் உடலில் வெப்பம் உண்டாகும் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. அப்படி இருக்கும் போது, குளிர்காலத்தில் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும் என்ற வானிலை மையத்தின் இந்த எச்சரிக்கையில், எவ்வளவு உண்மை இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.ஒரு மனித உடலின் இயல்பு வெப்பநிலை 37° C ஆகும். ஆனால் சுற்றுப்புறவெப்பநிலை குறையத் தொடங்கும் போது,உடல் அதன் அசல் வெப்பநிலையை பராமரிக்க உடலின் சக்தியை பயன்படுத்துகிறது. ஆனால் உடல் வெப்பநிலை நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட குறையத் தொடங்கும் போது, ஹைப்போ தெரிமியா தாக்குதல் ஏற்படுகிறது.

வானிலை ஆய்வுத் துறையின் எச்சரிக்கையின்படி, தில்லி என்.சி. ஆர், ஹரியானா, பஞ்சாபில் தற்போது நிலவும் வெப்பநிலை மேலும் சில காலம் தொடர்ந்தால், அதற்கு நாம் ஆளானால், ஹைப்போ தெரிமியா ஏற்பட வாய்ப்புள்ளது. எளிமையாகச் சொல்வதானால், உடலின் மைய வெப்பநிலை ஒரு எல்லைக்கு மேல் வீழ்ச்சியடையத் தொடங்கும் போது, ஹைப்போ தெர்மியாவுக்கு ஆளாக நேரலாம்.தில்லியில் உள்ள எல்.என்.ஜே.பி மருத்துவமனையின் சி.எம்.ஓ டாக்டர் ரிது சக்சேனா, குளிருக்கும் மதுவுக்கும் இடையிலான தொடர்பை விளக்குகிறார்.“நீங்கள் மது அருந்தும்போது, ஆல்கஹால் உங்கள் உடலுக்குள் சென்றபிறகு, வாஸோடைலேஷன் எனப்படும் ரத்தக் குழாய் விரிவடைவு ஏற்படுகிறது. இதன் காரணமாக, உங்கள் கை, கால்களின் இரத்த நாளங்கள் விரிவடைகின்றன, அவற்றில் அதிக இரத்தம் பாயத் தொடங்குகிறது. இதன் காரணமாக, நீங்கள் சூடாக உணர்கிறீர்கள். அதனால்தான் மேற்கத்திய நாடுகளில் குளிர்ச்சியான சூழ்நிலை இருப்பதால் மக்கள் அதிகமாக குடிக்கிறார்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள்.”

“ஆனால் உண்மையில் ஆல்கஹால் காரணமாக, கைகளிலும் கால்களிலும் இரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது, அதனால், வெப்பம் உணரப்படுகிறது. இந்த உணர்வின் அடிப்படையில், மக்கள் குளிர்கால ஆடைகளை மஃப்ளர்கள், ஜாக்கெட்டுகள், தொப்பிகள், ஸ்வெட்டர் போன்றவற்றை அகற்றுகிறார்கள். அதனால், அவர்களின் உடலின் மைய வெப்பநிலை வீழ்ச்சியடைகிறது. ஆனால், இது, நமது உடலுக்கு மிகவும் ஆபத்தானது என்பதை நிரூபிக்கும் தகவல்கள் இது வரை இல்லை”என்று அவர் கூறுகிறார்.மேக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவமனையின் இணை இயக்குநர் டாக்டர் ரோமெல் டிக்கு, இந்த ஐயத்தைத் தெளிவுபடுத்தும் விதமாக, “அதிக மது அருந்துபவர்களுக்கு முகம் சிவந்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆல்கஹால் காரணமாக, வெளிப்புற உறுப்புகளான முகம், கைகள், கால்கள் போன்றவற்றின் இரத்த தமனிகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இது வெப்பத்தை ஏற்படுத்துகிறது, ஏனெனில் இரத்தம் உடலின் உள் பகுதிகளிலிருந்து வெளிப்புறத்திற்கு பயணிக்கிறது, இதனால் உடலின் மைய வெப்பநிலை குறைகிறது” என்று கூறுகிறார்.

“எனவே, குளிர் காலத்தில் மது அதிகமாக அருந்தும்போது, உடலின் மைய வெப்பநிலை குறைகிறது. இரத்தஓட்டத்தின் அதிகரிப்பு உடலில் வியர்வையை உண்டாக்குகிறது. அதனால் உடலின் வெப்பநிலை மேலும் குறைகிறது. இவ்வாறாக, குளிர் காலத்தில் மது அதிகம் அருந்துவது பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்” என்று அவர் மேலும் கூறுகிறார்.“குளிர்காலத்தில் அதிகமாக மது அருந்தினால், முதல் விஷயம், சரியான பாதுகாப்பான உடை அணிவதைத் தவிர்ப்பார்கள். மூளையில் ஆல்கஹால் பாதிப்புகாரணமாக, நமது உடல் எந்த நிலையில்இருக்கிறது என்பது நமக்கே தெரியாது.இந்தச் சூழ்நிலையில், உடலின் வெப்பநிலை 37° C-க்கு கீழே செல்லும்போது, படிப்படியாக ஹைப்போ தெர்மியா தாக்கத் தொடங்கும். ஹைப்போ தெர்மியா ஒருவரை கோமா நிலைக்குக் கூட இட்டுச் செல்ல வாய்ப்புள்ளது. உயிருக்கும் ஆபத்துஏற்படக்கூடும்” என்று டாக்டர் ரிது சக்சேனா கூறுகிறார்.