tamilnadu

img

ஜேஎன்யு மாணவர் மீது ஏபிவிபி குண்டர்கள் மீண்டும் தாக்குதல்

புதுதில்லி:
ஜேஎன்யு விடுதியில் தங்கியிருக்கும் மாணவர் மீண்டும் குண்டர் கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வியாழன் அன்று நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக புதுதில்லி, வசந்த் குஞ்ச் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.அகில இந்திய மாணவர் சங்கத்தின் (AISA) முன்னணி ஊழியரும், எம்.ஏ. மாணவருமான விவேக் பாந்தே, வியாழன் அன்று அதிகாலை 1.30 மணியளவில் அவர் தங்கியிருக்கின்ற விடுதி அறையில் 16 பேர்களடங்கிய குண்டர் கும்பலால் தாக்கப்பட்டார். அவர்கள் மிகவும் குடித்திருந்ததாகவும், அவர்களில் சிலரைத் தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்றும், அவர்களில் நால்வரின் பெயர்கள் தெரியும் என்றும் பாந்தே காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.

“அன்றைய இரவு முழுதும் விடுதியிலேயே இருந்தேன். மருத்துவ சிகிச்சை பெற்றபின்பு, காவல்நிலையம் வந்து புகார் அளித்தேன். காவல்துறையினர் என்னைப் பல மணி நேரம் காக்க வைத்திருந்துவிட்டு, கடைசியில் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்தனர்,” என்று பாந்தே கூறினார்.    2016 அக்டோபரில் நஜீப் அகமது தாக்கப்பட்டு அதன்பின் காணாமல் போனது இந்த விடுதியில்தான். ஜேஎன்யு மாணவர் சங்கம் இந்த சம்பவம் குறித்துக் கூறுகையில், ஏபிவிபி-யைச் சேர்ந்தவர்கள்தான் பாந்தே மீது தாக்குதல் தொடுத்துள்ளார்கள் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறது. இதே குண்டர்கள்தான் ஜனவரி 5 அன்று ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் அய்ஷே கோஷைத் தாக்கியவர்கள் ஆவர் என்றும் அது கூறியிருக்கிறது.             (ந.நி.)