புதுதில்லி:
2020 பிப்ரவரியில் நடைபெற்ற தில்லி வன் முறை தொடர்பாக, மாணவர் உமர் காலித்தை, தில்லி காவல்துறையானது, கடந்த ஞாயிறன்று சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (The Unlawful Activities Prevention Act-
UAPA) கைது செய்தது. தற்போது அவரை 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதனிடையே, போலீஸ் கைதுக்கு முன்னதாகஉமர் காலித் பேசியிருக்கும் 2 நிமிடம் 18 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், உமர் காலித் கூறியிருப்பதாவது:“நீங்கள் இந்த வீடியோவைப் பார்க்கிறீர்கள் என்றால், நான் கைது செய்யப்பட்டேன் என்று அர்த்தம். ஏனெனில், 2020 பிப்ரவரியில் தலைநகரில் பெரிய அளவிலான வகுப்புவாத வன்முறையைத் தூண்டிய நபர்களை நோக்கி போலீஸ் வலைவிரியவில்லை. அவர்கள் மீதெல்லாம் வழக்குபதிவுசெய்யவில்லை. எப்.ஐ.ஆர் கூட வேண்டாம்,அவர்களைக் கூப்பிட்டு விசாரிக்கக் கூட இல்லை.மாறாக குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்குஎதிராக போராடியவர்கள் அரசை விமர்சித்தவர்கள் மீது தில்லி காவல்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் கூட அவர்களிடத்தில் இல்லை.என் மீதும் தவறான குற்றங்களைச் சுமத்தி, கைது செய்வதற்கு சிலநாட்களாகவே தில்லி காவல்துறையினர் நேரம் பார்த்து வந்தனர். பிப்ரவரி 17 அன்று அமராவதியில் நான் 17 நிமிடங்கள் பேசிய போது கலவரம், வன்முறை என்று பேசவில்லை, சத்யாகிரகம், அகிம்சை என்றுதான் பேசினேன். இந்நிலையில் எனக்கு எதிராகப் பொய்க்குற் றச்சாட்டுகளை சுமத்தி, எனக்கு எதிராக பொய் சாட்சியங்களை தயாரித்து வருகின்றனர். அரசைவிமர்சித்தவர்கள் அனைவரையும் சிறைக்குள் தள்ள முயற்சிகள் நடக்கின்றன.நான் என்ன குற்றம் செய்தேன்? இந்த நாடுஎனக்கும், உங்களுக்கும் சொந்தம் என்று பேசியதுதான் குற்றமா?மக்கள் இதனை அனுமதிக்காதீர்கள்.. அஞ்சாதீர்கள்.. அனைவரும் அநீதிக்கு எதிராக குரல் கொடுங்கள்.இவ்வாறு உமர் காலித் பேசியுள்ளார்.
கபில் மிஸ்ரா, அனுராக், பர்வேஷ் மீது தேசத்துரோக வழக்கு பாயாதா? ஐபிஎஸ் அதிகாரி ஜூலியோ ரிபைரோ கேள்வி
வடகிழக்கு தில்லியில் நடந்த கலவரம் தொடர்பாக சமூகச்செயற்பாட்டாளர்கள், அரசியல் விமர்சகர்களை சிறையில் தள்ளும் தில்லி காவல்துறை ஏன், பாஜக-வின் அனுராக் தாக்குர், கபில் மிஸ்ரா, பர்வேஸ் வர்மா ஆகியோர் மீது நட
வடிக்கை எடுக்கவில்லை..? முஸ்லிம்கள், இடதுசாரிகள் மீதுமட்டும்தான் தேசத் துரோக வழக்கு பாயுமா? என்று ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜூலியோ ரிபைரோ கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், “தில்லி காவல்துறை ஆணையர் ஸ்ரீவஸ்தவா, ஹர்ஷ்மந்தர், மற்றும் தில்லி பல்கலை பேராசிரியர் அபூர்வானந்த் ஆகியோரின் தேசப்பற்றை சந்தேகிக்கிறார்; ஆனால் எனக்கு நன்றாகத் தெரியும், அவர்கள் இருவருமே காந்தியவாதிகள்” என்றுகுறிப்பிட்டுள்ள ரிபைரோ, “இந்த ஆட்சிக்கு காந்தியவாதிகளைக் கண்டால் பிடிக்காது என்பது நன்றாகத் தெரிகிறது” என்றும் சாடியுள்ளார்.