சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. அகழாய்வுப்பகுதிகளை மழைநீர் மூழ்கடித்துள்ளது. கீழடியில் பண்டைய தமிழர் நாகரிகத்தை அறியும் வகையில் நான்கு கட்ட அகழாய்வுப் பணிகள் முடிந்துள்ளன. ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக கீழடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அகழ்வாராய்ச்சிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் நீர் நிரம்பியது. அதனை மின் மோட்டார்கள் கொண்டும், வாளிகள் கொண்டும் இறைத்து அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரட்டைச் சுவர் கண்டுபிடிக்கப் பட்ட இடத்தில் நீர் தேங்காமல் இருக்க தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டது. அதன் மீது தேங்கியுள்ள தண்ணீரையும் தொழிலாளர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.