சேலம்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள மாவட்டங்களில் ஒன்றான சேலத்தில் தினசரி பாதிப்பு 100-க்கு மேல் உள்ளது. அங்கு இதுவரை 6,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 85 பேர் பலியாகியுள்ள நிலையில், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதியான ஜலகண்டபுர பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா பரவல் காரணமாக ஒரு வாரம் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வில்லா ஊரடங்கை மீறி அப்பகுதியில் கறி விருந்து வைக்கபட்டுள்ளது. இந்த விருந்தில் கலந்து கொண்ட 46 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் மொத்தம் எத்தனை பேர் கலந்துகொண்டர்கள்? அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதா? விருந்தில் கலந்துகொண்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனரா? என்ற முழுவிபரம் இன்னும் வெளியாகவில்லை.
இந்த சம்பவம் சேலம் மாவட்டத்தை உலுக்கி உள்ளது. ஏற்கனெவே இதே மாவட்டத்தின் மேட்டூர் பகுதியில் இறுதி சடங்கில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.