குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 20 பேருக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் அடுத்த வேங்கைவயல் கிராமத்தில் சுமார் 30 தலித் குடும்பங்களின் குடியிருப்புகள் உள்ளது. அப்பகுதியில் உள்ள குடிநீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று குடிநீர் வசதி ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த 20 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 20 பேரும் இன்று மாலை 5 மணிக்கு திருச்சி சரக டிஐஜி அமைத்த 11 பேர் கொண்ட குழு முன்பு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.