tamilnadu

img

மினி கிளினிக்குகளில் மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்....

புதுக்கோட்டை:
மக்கள் நலன்கருதி தமிழக அரசு தொடங்கியுள்ள 2 ஆயிரம் மினி கிளினிக்குகளிலும் மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்கக் கோரிவெள்ளிக்கிழமை மருந்தாளுநர்கள் புதுக்கோட்டையில் மாநில அளவிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். உண்ணாவிர தத்திற்கு அனுமதி மறுத்த போலீசார் 200 பேரை கைது செய்தனர்.

மக்கள் நலன் கருதி தமிழக அரசு தொடங்கி யுள்ள 2 ஆயிரம் மினி கிளினிக்குகளிலும் மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 780 மருந்தாளுநர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.வட்டார மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மருந்து கிடங்குகளில் தலைமை மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.தலைமை மருந்தாளுநர், மருந்து கிடங்கு அலுவலர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாணை 180-யின் படி இழப்பீடு வழங்கவேண்டும். கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், குடும்ப வாரிசுக்கு நிபந்தனையின்றி அரசு வேலையும் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திஇந்த உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்றது.புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அமைப்புச் செயலாளர் வே.விஜயகுமார் வரவேற்றார். போராட்டத்தை அரசு ஊழியர் சங்கமாநில துணைத் தலைவர் இரா.மங்களபாண்டியன் தொடங்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் உ.சண்முகம் பேசினார். தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க மாநில துணைத் தலைவர் டாக்டர் மு.அகிலன், அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் ஆ.பெரியசாமி, மருந்தாளுநர் சங்க மாநில பொருளாளர் அ.விஸ்வேஸ்வரன் மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.கொட்டும் மழையிலும் உண்ணாவிரதம் இருந்த மருந்தாளுநர்களுக்கு போலீசார் அனுமதி தர மறுத்தனர். தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுக்க இருந்த 55 பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

தமிழக அரசுக்கு அரசு ஊழியர் சங்கம் கண்டனம்
அற வழியிலான உண்ணாவிரதப் போராட்டத்தை  நடத்த திட்டமிட்டு புதுக்கோட்டையில் குழுமிய  மருந்தாளுநர்களை கைது செய்து, ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும் தொழிற்சங்க உரிமையை பறிக்கும் தமிழக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின்  மாநிலத் தலைவர் மு.அன்பரசு, மாநிலப் பொதுச்செயலாளர் ஆ.செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

புதுக்கோட்டையில்  ஜனவரி 8 அன்று தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி காந்திய வழி உண்ணாவிரதப் போராட்டத்தின் போது அனுமதி மறுத்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு தொழிற்சங்க  ஜனநாயக  குரல்வளையை  நெரிக்கும் தமிழக அரசின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் இந்தியாவிலேயே சிறப்பாக மக்கள் சேவையாற்றி கொரோனா எனும் கொடிய தீநுண்கிருமியை எதிர்கொண்ட மருத்துவத்துறையில் முக்கிய பங்காற்றி  வரும் மருந்தாளுநர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, மருந்தாளுனர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் மற்றும் நடமாடும் மருத்துவக் குழுக்கள் நிரந்தர மருந்தாளுநர் பணியிடம் உருவாக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம் மருந்தாளுநர்களின் பணி நேரம் 9 மணி முதல் 4 மணி வரை என்ற அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் மருந்தாளுநர்  பணியிடங்களை உருவாக்க வேண்டும். பதவி உயர்வு தேக்கநிலையை போக்க வேண்டும்.கூடுதல் பணியாளர்களை உருவாக்க வேண்டும்.

புறஆதார முறை மற்றும் தொகுப்பூதியம் முறையை களைந்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அச்சங்கம் நடத்திய தொடர்ச்சியான போராட்டத்தையடுத்து தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாநில மாநாட்டில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், கோரிக்கைகளை  நிறைவேற்றுவதாக அறிவித்தார். அரசு செயலாளர் மட்டத்திலான 4 கட்டபேச்சுவார்த்தையில் அமல்படுத்துவதாக அறிவித்த கோரிக்கைகள் ஆண்டுக்கணக்கில் நிறைவேற்றாததை கண்டித்து ஜனவரி 8 அன்றுபுதுக்கோட்டையில்  காந்திய வழியிலான உண்ணாவிரத போராட்டத்தை  நடத்த திட்டமிட்டு முறையாக அறிவிப்பு செய்தும் இன்று வரை அக்கோரிக்கை நிறைவேற்றம் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மாநிலம் முழுவதுமிருந்து புதுக்கோட்டையில் குழுமிய  மருந்தாளுநர்களை கைது செய்வதை விடுத்து முறையாக அழைத்துப்பேசி கோரிக்கைகளை நிறைவேற்றித் தரவேண்டுமென  தமிழக அரசையும் சுகாதாரத்துறையையும் கேட்டுக்கொள் கிறோம்.ஆதரவு தெரிவிக்கச்சென்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகளை கைதுசெய்ததையும்  வன்மையாகக் கண்டிப்பதோடு, பறிக்கப்பட்ட சலுகைகளை வழங்குதல், பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் துறைவாரிச்சங்க நிர்வாகிகளை தமிழக அரசு நேரடியாக அழைத்துப்பேசி தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.