புதுக்கோட்டை:
தமிழக அரசின் சார்பில் ரூ.6,941கோடி மதிப்பில் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் ரூ. 3,384 கோடியில் காவிரி உப வடிநில நீர்பாசன உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் திட்டம் ஆகியவற்றுக்கு முதல்வர் பழனிசாமி ஞாயிறன்று அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான விழா துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதுக்கோட்டையில் நடக்கிறது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை செயலர் க.மணிவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:காவிரி-தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தில் முதல் கட்டமாக காவிரி-குண்டாறு இணைப்புத்திட்டம் மற்றும் காவிரி உப வடிநில நீர்பாசன உள்கட்டமைப்புகளை சீரமைக்கும் திட்டம் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூர் ஊராட்சியில் ஞாயிற்றுக் கிழமை நடக்கிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடக்கும் விழாவில் இத்திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல்நாட்டுகிறார். வெள்ளக் காலங்களில் காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையில் இருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர்மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பதன் மூலம் இப்பகுதி மக்களின் நூறாண்டு கனவு நிறைவேறுகிறது. ரூ. 6,941 கோடி மதிப்பிலான முதல்கட்டத் திட்டத்திற்கு தற்போது அடிக்கல் நாட்டப்படுகிறது. இதன் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் 342 ஏரிகளும், 42,170 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் 118.45 கிலோ மீட்டர் நீளத்துக்கு கட்டளைக் கால்வாயில் இருந்து கால்வாய் வெட்டப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்கப்படுகிறது.
2-ஆம் கட்டமாக புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் 220 ஏரிகள், 23,245 ஏக்கர் நிலங்கள்பயன்பெறும் வகையில் தெற்கு வெள்ளாற்றில் இருந்து 109 கிலோ மீட்டர் நீளத்துக்கு கால்வாய் உருவாக்கி வைகையுடன் இணைக்கப்படுகிறது. 3-ஆம் கட்டத்தில் விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்களில் 492 ஏரிகள், 44,547 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 34 கிலோ மீட்டர் நீளத்துக்கு கால்வாய் வெட்டி வைகை முதல் குண்டாறு வரை இணைக்கப்படுகிறது. மொத்தம் ரூ.14,400 கோடியில் 262 கிலோ மீட்டர் தொலைவுக்கு நிறைவேற்றப்பட உள்ள இத்திட்டம் மூலம் வெள்ள காலத்தில் வீணாகும் 6,300 கன அடி நீர் ஆக்கப்பூர்வமாக திருப்பப்படும்.காவிரி டெல்டாவில் உள்ள பழமைமிக்க பாசன கட்டுமானங்களில் ஸ்காடா தொழில் நுட்பங்கள் மூலம் ரூ. 72 கோடியில் தானியங்கி அமைப்புகள் நிறுவப்படுவதால் கால்வாய் பாசனத்திறன் 20 சதவீதம் அதிகரிக்கும்
அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பெருமிதம்
மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தில் முதல் கட்டமாக காவிரியிலிருந்து புதுக்கோட்டை தெற்கு வெள்ளாறு வரை ரூ. 6,971 கோடியில்118 கிலோ மீட்டர் தூரம் கால்வாய் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் கரூர் மாவட்டத்தில் சுமார் 4 கிலோ மீட்டருக்கு ரூ. 171 கோடியிலும், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சுமார் 5 கிலோ மீட்டருக்கு ரூ. 160 கோடியிலும் கால்வாய் வெட்டுவதற்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொள்வதற்காக ஏற்கனவே தமிழக அரசு ரூ.700 கோடியை ஒதுக்கியது. இக்கால்வாயில் வினாடிக்கு 6,360 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படும். அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 43,000 ஏக்கரில் பாசனத்துக்கு உத்தரவாதம் ஏற்படும். புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நூற்றாண்டு கனவுத் திட்டம் தற்பொழுது நிறைவேறுகிறது என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.