tamilnadu

img

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவியை காப்பாற்ற 120 கி.மீ சைக்கிள் பயணம்

புதுச்சேரி:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் (66) விவசாயக் கூலித் தொழிலாளியான இவரது மனைவி மஞ்சுளா (60)  வாய் புற்று நோயாளியாவார் (buccal chronoma)  கீமோதெரபி சிகிச்சையளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள மனைவியை தனியார் மருத்துவமனையில்  சேர்த்து சிகிச்சையளிக்க  வசதியில்லாததால்  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார். கொரோனாவால் ஊரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அறிவழகன், தனது மனைவியை சைக்கிளில் அமர வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மார்ச் 30-ஆம் தேதி இரவு சைக்கிளில் தனது மனைவி மஞ்சுளாவுடன் புறப்பட்ட அறிவழகன் மாயவரம், சீர்காழி, சிதம்பரம், கடலூர் என 120 கிலோமீட்டர் தூரத்தை இரவு முழுவதும் கடந்து, மார்ச் 31-ஆம் தேதி அதிகாலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையை அடைந்துள்ளார். இடையில் சாப்பாட்டிற்காக மட்டும் குறிஞ்சிப்பாடியில்  சிறிது நேரம் நின்றுள்ளார். கொரோனா தொற்று காரணமாக வெளிப்புற சிகிச்சைப் பிரிவுகள் அனைத்தையும் நிறுத்தி வைத்திருக்கும் ஜிப்மர் மருத்துவமனையில், அவசரச் சிகிச்சை பிரிவு மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  அறிவழகன் தனது மனைவியை சைக்கிளிலேயே அழைத்து வந்த தகவலைக் கேட்ட மருத்துவர்கள் மஞ்சுளாவை உடனே மருத்துவமனையில் அனுமதித்து தேவையான சிகிச்சையளித்திருக்கிறார்கள்.

இருவரையும் மருத்துவமனை வளாகத்திலேயே தங்க வைத்த மருத்துவர்கள், அவர்களுக்கு தங்கள் செலவில் உணவுகள், மருந்துகள் போன்றவற்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.சிசிச்சை முடிந்து சொந்து ஊருக்குச் செல்வதற்காக ஜிப்மர் மருத்துவமனைக் கண்காணிப்பாளர் எஸ்.பாந்தே ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்துள்ளார். சிகிச்சைக்குப் பிறகு இருவரையும் தங்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இலவசமாக கும்பகோணம் அனுப்பி வைத்துள்ளார். அவர்களோடு சைக்கிளும் பயணித்துள்ளது.

அவர்களை ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்ற ஓட்டுநர் ராஜ்குமார், கூறுகையில், அறிவழகன் உடலளவில் பலமில்லாதவர், ஆனால், அவர் எடுத்த துணிச்சலான முடிவு தான் அவரது சைக்கிள் பயண வெற்றிக்குக் காரணம். நான் பல கேள்விகளை அவரிடம் கேட்டேன். சில கேள்விகளுக்கு மட்டுமே அவர் பதிலளித்தார். குறிப்பாக இளம் வயதில் அறிவழகன் ஒரு கபடி வீரராக இருந்துள்ளார் என்றார்.