புதுச்சேரி:
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து பொங்கலுக்கு பிறகு ‘பந்த்’ உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை கண் டித்தும், அவரை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் கடந்த 8 ஆம் தேதி முதல் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
புதுவை அண்ணாசிலை பின்புறம் மறைமலை அடிகள் சாலையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்த போராட்டத்தில் அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.இரவு, பகலாக போராட்ட களத்திலேயே உணவு அருந்தியும், தூங்கியும் முதலமைச்சர் நாராயணசாமி, கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். 4 நாட்கள் தொடர் தர்ணா போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.துணை ராணுவம், போலீசாரின் கெடுபிடியாலும், நகரின் பிரதான சாலையில் போராட்டம் நடந்ததாலும் பொதுமக்களின் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் உருவானது. பொங்கல் பண் டிகை நெருங்கி வருவதால் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தை தொடர வேண்டாம் என காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் முடிவு செய்தனர்.
பொங்கலுக்கு பிறகு மீண்டும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதனால் ஒரு நாள் முன்னதாகவே ஞாயிற்றுக்கிழமை(ஜன.10) இரவு போராட்டம் நிறைவு செய்யப் பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, பொங்கல் பண்டிகைக்கு பிறகு ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து பந்த் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என அறிவித்தார்.இதன்படி வருகிற 22 ஆம்தேதி கையெழுத்து இயக்கம், 29 ஆம் தேதி அனைத்து தொகுதியிலும் கண்டன ஆர்ப்பாட்டம், பிப்ரவரி 5 ஆம் தேதி உண்ணாநிலை, அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 15 முதல் 20 ஆம் தேதிக்குள் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டமும் நடத்துவது என முடிவு செய்யப் பட்டுள்ளது.