சிபிஎம் மாநில செயற்குழு இரங்கல்
சென்னை, ஆக.4 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் நாகப்பட்டினம் முன்னாள் மாவட்டச் செயலாளரும் செங்கொடி இயக்கத்தின் முன்னோடித் தலைவரு மாகிய தோழர் ஏ.வி.முருகையன் ஆகஸ்ட் 3 அன்று இரவு 11:30 மணியளவில், நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம், வெண்மணச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 66. அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப் பட்டினம் மாவட்ட வீரஞ்செறிந்த போராளிகளில் ஒருவரான தோழர் ஏ.வி. முருகையன் இயற்கை எய்திவிட்டார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இளம் வயதிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து தனது அயராத உழைப்பாலும், உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக நடத்திய வீரியமிக்க போராட்டங்களாலும், கிளைச் செயலாளர் துவங்கி கட்சியின் மாவட்டச்செயலாளர், மாநிலக்குழு உறுப்பினராக திறம்பட செயலாற்றியவர் தோழர் ஏ.வி. முருகையன் அவர்கள். நாகப்பட்டினம் மாவட்டத்தில், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கான பல வரலாற்று சிறப்புமிக்க போராட்டங்கள் அவர் மாவட்டச் செயலாளராக இருந்த காலத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற வறட்சி நிவாரணம் கோரி நடைபெற்ற தொடர் முற்றுகைப் போராட்டம் குறிப்பிடத்தக்கதாகும். செட்டிபுலம், விழுந்தமாவடி, மாத்தூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற ஆலய நுழைவுப் போராட்டம், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை எதிர்த்த பல்வேறு போராட்டங்களில் தீர்வு ஏற்படுகிற வரை போராட்டத்தை முன்னின்று நடத்திய போராளி தோழர் ஏ.வி. முருகையன் அவர்கள்.
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தில் சுமார் 15 ஆண்டு காலம் வட்டச் செயலாளராகவும், மாவட்டச் செயலாளராகவும், மாநில நிர்வாகிகளில் ஒருவராகவும் செயல்பட்ட காலத்தில் கூலி உயர்வுக்கான போராட்டம், இயந்திரமயமாக்கலுக்கு எதிரான போராட்டம், வீட்டுமனைப் பட்டா, நிலவுரிமைக்கான பல்வேறு போராட்டங்கள் வரலாற்றில் முத்திரைப் பதிக்கத்தக்கவையாகும். இரண்டு முறை ஊராட்சிமன்றத் தலைவராகவும், மாவட்ட ஊராட்சி கவுன்சிலராகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பழுக்கற்ற முறையில் நேர்மையாக பணியாற்றியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக 11 ஆண்டுகள், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர், தற்போது மாநிலக்குழு சிறப்பு அழைப்பாளராக செயல்பட்டு வந்த தோழர் ஏ.வி.முருகையன் உடல்நலக் குறைவால் மறைந்துவிட்டார். அவருடைய மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், உழைப்பாளி மக்களுக்கும் பேரிழப்பாகும். அந்த செயல் வீரனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு சார்பில் ஆழ்ந்த அஞ்சலியையும், செவ்வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். அவரை இழந்து தவிக்கும் அவருடைய துணைவியார், மகன், மகள் மற்றும் உறவினர்களுக்கும், நாகை மாவட்ட தோழர்களுக்கும் கட்சியின் மாநிலக்குழு சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்.சங்கரய்யா இரங்கல்
தோழர் ஏ.வி.முருகையன் மறைவுச் செய்தி அறிந்து துயரமும் அதிர்ச்சியும் தெரிவித்த கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார். கட்சியின் நாகை மாவட்டக்குழுவிற்கும், தமிழ்நாடு மாநிலக்குழுவிற்கும் தமிழக உழைப்பாளி மக்களுக்கும் தோழர் ஏ.வி.முருகையன் மறைவு பேரிழப்பு என்று கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் ஏ.கே.பத்மநாபன், டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, அ.சவுந்தரராசன், பி.சம்பத் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கே.பாலகிருஷ்ணன் நேரில் அஞ்சலி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெண்மணச்சேரியிலுள்ள இல்லத்துக்கு வருகை தந்து தோழர். ஏ.வி.எம்மின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். கட்சியின் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகை மாலி, மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமாகிய வி.மாரிமுத்து, மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், மூசா, ஜி.ஆனந்தன், தஞ்சை மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, தஞ்சை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன், மாநிலச் செயலாளர் சாமி. நடராசன், விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் மாநிலப் பொதுச்செயலாளர் வி. அமிர்தலிங்கம், மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின், மாநில நிர்வாகிகள் எஸ்.சங்கர், சந்திரன், பழனிச்சாமி, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், மாதர் சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் த.லதா, எஸ்.சுபாதேவி, கே.டி.எம். சுஜாதா, மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் டி.கணேசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்டச் செயலாளர் ப.சுபாஸ்சந்திரபோஸ், பி.ஏ.ஜி.சந்திரசேகரன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பி. மாரியப்பன், மாவட்டச் செயலாளர் அமுல் காஸ்ட்ரோ, பிரகாஷ், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.என்.அம்பிகாபதி, வி.தொ.ச. மாவட்டத் தலைவர் கே.சித்தார்த்தன், சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவர் பி.ஜீவா, த.மு.எ.க.ச. மாவட்டத் தலைவர் ந.காவியன் மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், தோழமைச் சங்க நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அஞ்சலி செலுத்தினர்
திமுக நாகைத் தெற்கு மாவட்டச் செயலாளர் கெளதமன், அதிமுக சார்பில் ஏ.ஜெயபால், வேதையன், சிபிஎம் நாகை நகரச் செயலாளர் சு.மணி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், ஊர்ப்பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இரங்கல் கூட்டம்
இறுதியஞ்சலியைத் தொடர்ந்து தோழர். ஏ.வி.எம்மின் இல்லத்திற்கு முன்பு மாவட்டச் செயலாளர் நாகை மாலியின் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அஞ்சலியுரை ஆற்றினார்.
தோழர் ஏ.வி.முருகையன் உடலுக்கு கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.