அலகாபாத்தில் கங்கை, யமுனை மற்றும் மண்ணுக்குள் பாய்வதாக கருதப்படும் சரஸ்வதி ஆகிய ஆறுகளின் சங்கமத்தில் மூழ்கி புண்ணியம் தேட தமிழர்கள் ஒன்று கூடுகின்றனர். எனவே, அங்கு திருவள்ளுவர் சிலை அமைக்க உ.பி யின் இந்தி அறிஞர்கள் விரும்பினர். இவர்கள் உ.பியில் மொழிகளை இணைக்க அமைந்த ‘பாஷா சங்கம்’ எனும் சமூகசேவை அமைப்பை சேர்ந்தவர்கள். இந்த அமைப்பின் தலை மையிடமான அலகாபாத் சங்கத்தின் தென்கரை சாலைக்கு திருவள்ளுவர் பெயரை வைத்து அவரது சிலையையும் அமைக்க வலியுறுத்தினார்கள். இதையடுத்து கடந்த ஜூலை 10 இல் தென்கரை சாலைக்கு ‘தமிழ்கே சந்த் கவி திருவள்ளுவர் மார்க்’ (தமிழ் ஐயன் திருவள்ளுவர் சாலை) என இந்தி, தமிழ் பெயரில் பெயர்ச்சூட்டப்பட்டது. அதே நேரம் திட்டமிட்ட இடத்தில் சிலையை நிறுவ அம்மாநில அரசு தடை விதித்தது.
சரி, ஐயன் என்பது என்ன?
தொடக்கத்தில் ஐயன் அடைமொழியுடன் அழைக்கப்பட்டவர்கள் மூவர். அவர்கள்,
திருவள்ளுவர், ஐயனாரிதன் (ஐயன் ஆரிதன்), அயோத்திதாச பண்டிதர். தேவாரப்பாடல்கள்
சிவன் ஐயன் என அழைக்கப்படுகிறான். அப்பன் என்பது பெருமாள். சிவன், திருமால்
இருவருக்கும் பிறந்தவன் ஐயப்பன் என்கிறது புராணக்கதை. ஐயன் + அப்பன் - ஐயப்பன்.
“ஐயைனும் பெயரே குருவும் அரசனும் எழிலும் இருமலு மிடைச்சொல்லுங் கோழையும் / ஐயன் எனும் பெயர் குருவுந் சாத்துனுந் தந்தையு முதல்வனு மந்தணன்
பெயருமாம்” என்கிறது வடமலை நிகண்டு. ‘ஐயை தவப்பெண்ணும் காளியும் துர்க்கையும் தலைவியும் புதல்வியும் இடைச்சியும் முமையும்’ (பொதிகை நிகண்டு).
சூடாமணி நிகண்டு ஐயன் என்பதற்கு மூத்தோன், ஐயனார், பிதா, கடவுள் என்பதாகப் பொருள் தருகிறது. ஐ - ஐயன் - ஐயா - ஐயோ - ஐயே - ஐயர் - ஐயங்கார்,... தொடர்புடைய சொற்கள்.
ஐ என்றால் தலைவன், ஐயனார் - தலைவனானவன் என்று பொருள்.
தம் + ஆய் - தாய் ; தம் + ஐயன் - தமையன்; தம் + அக்கை - தமக்கை.
ஐயன் என்பதன் பெண்பால் ஐயள் .
ஐயள் என்றால் வியத்தற்குரிய அழகுடையவள் என்று பொருள்.
ஐயா - மரியாதை விளிப்பெயர், ஓர் இரக்கக் குறிப்புச்சொல்.
ஐயே என்பது ஐயன் என்பதன் விளி;
ஐயை- தலைவி, காளி, தவப்பெண், குரு பத்தினி, மகள், பார்வதி, துர்க்கை, இடைச்சி.
ஐயோ - வியப்பிரக்கச் சொல் அல்லது துன்பக்குறிப்பு.
ஐய - அதிசயதக்க, அழகிய, அதிசயகுறிப்பு.
ஐயர் - பார்ப்பான், தேவர், பெருமையில் சிறந்தவர்,முனிவர்.
ஐயன் என்பதற்கு அரசன், கடவுள், குரு, அருகன, துருதை, மூத்தோன், உயர்ந்தோன் எனப் பல பொருளுண்டு.
ஐயோ - நுண்ணியன்.
ஐயன் என்பதற்கு ஆங்கிலத்தில் priest, father, master sage என்கிறது மணிமேகலை தமிழ் - ஆங்கில அகராதி.
வேமன் தமிழ்ச்சொல் அகராதி , ஐயன் என்பதற்கு தலைவன், மூத்தோன், முனிவன்,
ஆசான், உயர்ந்தோன், தந்தை, அரசன், கடவுள், ஐயனார், பார்ப்பான் என்பதாகப் பொருள் தருகிறது.
சமீபத்தில், தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியிலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மர்ம நபரால் முகத்தில் கறுப்புச்சாயம் பூசப்பட்டது. அதே சிலைக்கு, இந்து மக்கள் கட்சி
யின் மாநில தலைவர் அரஜூன் சம்பத், காவித்துண்டு, ருத்ராட்ச மாலை அணிவித்தார்.
இவை இரண்டும் கண்டனத்திற்கு உள்ளானவை.
உச்சி குடுமி, கையில் ஓலைச்சுவடி, எழுத்தாணியுடன் கூடிய திருவள்ளுவர், 1964 ஆம்
ஆண்டு கே.ஆர்.வேணுகோபால் சர்மா என்பவரால் வரையப்பட்டது. இதற்கு முன்பும்
திருவள்ளுவர் படங்கள் உண்டு.
அயோத்திதாச பண்டிதரின் பாட்டனார் திரு கந்தப்பன் , ஓலைச்சுவடிகளை அச்செடுத்து எல்லீஸ் பிரபுடன் பதிப்பிக்கக் கொடுத்தார். திருக்குறள் அச்சுநூலாக பதிப்பாக்கம் கொண்டதன் நினைவாக திருவள்ளுவர் உருவம் பதித்த தங்க நாணயம்
வெளியிடப்பட்டது. இதுதான் திருவள்ளுவரின் முதல் படம் . அதில் திருவள்ளுவர் மொட்டைத் தலை, தோளில் துண்டு, தலைக்கு மேலே குடை, கையில் ஓலைச்சுவடி
யுடன் அமர்ந்திருக்கிறார். (பதிவு - ராசி.பன்னீர்செல்வன் ).
திருவள்ளுவரின் காலம், இரண்டாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரையிலான இடைப்பட்ட காலம் என்பதாக வரையறுக்கப்படுகிறது. ஏறக்குறைய சமண
காலம். இக்காலத்தில் பிராமணன், ஐயர் போன்ற சொற்களுக்கு இடமில்லை. அரசன்,
பகவன், ஆசான் யாவரும் வள்ளுவரால் பாடப்பட்டவர்கள் என்பதால் அவையும் அவ
ருக்குப் பொருந்தாது. இவர் உயர்வு தாழ்வு பாராட்டதவர். ஆகவே உயர்ந்தோன் என்கிற
சொல்லும் பொருந்தாது. ஆக, ஐயன் என்பதற்கு மூத்தோன் என்பதாகப் பொருள் கொள்ளலாம்.