பாரதியாரின் முப்பெரும் பாடல்களாவன கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு. மாணிக்கவாசகர், ஆண்டாள் நாச்சியார் முதலானோர் தங்கள் பாடல்களில் இறைவனைத் தலைவனாகவும் மற்ற உயிர்கள் அனைத்தும் தலைவியாகவும் பாவித்துப் பாடல்களை இயற்றினர். ஆனால் பாரதி, தன்னைத் தலைவனாகவும் கண்ணனைத் தோழனாக, தாயாக, தந்தையாக, சேவகனாக, அரசனாக, சீடனாக, சற்குருவாக, குழந்தையாக, விளையாட்டுப் பிள்ளையாக, காதலனாக, காந்தனாக, காதலியாக, ஆண்டானாக, குலதெய்வ மாக என்று வரிசைப்படுத்தி பாடிய பாடல் இது.
கண்ணன் - என் காதலன் பகுதியில்,
“ஏடி, சாத்திரங்கள் வேண்டேன்: - நின
தின்பம் வேண்டுமடி, கனியே, - நின்றன்
மோடி கிறுக்குதடி தலையை, - நல்ல
மொந்தைப் பழையகள்ளைப் போலே’’
என்பதாக ஒரு வரி.
இப்பாடலில் மோடி என்பதன் பொருள் என்ன ?
தமிழிசை மூவர்களில் ஒருவரான மாரிமுத்துப் பிள்ளை சிவபெருமான் குறித்து
பாடியுள்ள ஒரு பாடலில், பிட்டுக்கு மண் சுமந்தது, பிள்ளைக் கறி கேட்டது, சாதி
இல்லாதவன், தாயும், தந்தையும் இல்லாதவன், குறவர் வீட்டுப் பெண்ணை மக
னுக்கு மணம் முடித்தவன்,...என்பதாகப் பாடிச் செல்லும் ஒரு பாடலில் ‘மறை
ஓதிவணங்கு நடேசரே உம்மை நான்/ ஒப்பாரும் இல்லாத தப்புலி என்றேனோ...
ஏதுக்கித்தனை மோடிதான் உனக்கு / என்றன் மேல் ஐயா’ என இகழ்வதைப் போல புகழும் இப்பாடலில் மோடி என்கிற சொல் இடம் பெற்றுள்ளது.
‘கையாிய மண்டைக் கண் மோடி காவலர்க்குத் தான் முந்துறும்’ என்கிறது புறப்பொருள் வெண்பாமாலை. இங்கு மோடி என்பது பெரிய வயிறுடைய பெண்
தெய்வம்(சக்தி). இந்திய எழுத்துரு மொழிகளில் மோடியெழுத்து என்றொரு வகை உண்டு. மராட்டிய எழுத்து - சேர்த்தெழுதும் வகை எழுத்து இது.
மோடாமோடி என்றொரு சொல் உண்டு. இதற்கு பகட்டு அல்லது ஆடம்பரம்
என்று பொருள். இச்சொல்லுக்கு அழகு, எழில் என்பதாகப் பொருள் கொள்ள
லாம். இச்சொல் ‘மோடிமுட்டித் தனம்’ என வழக்குச் சொல்லாகியிருக்கிறது.
மோடி+ மோடி - மோடிமோடி - மோடாமோடி.
மோடி - செருக்கு , உயர்த்தோற்றம், வேடிக்கைக் காட்சி, பிணக்கு, ஏய்ப்பு
என்பதாகவும் பொருள் கொள்ளலாம். ஊடலாய்ப் போவாரை மோடி திருத்துவார் என்கிறது - விறலிவிடு தூது. மோடி என்பதற்கு மொத்தம் என்றொரு
பொருளுண்டு. ‘விதை நெல்லை சந்தையில் மோடியாய் வாங்கினேன்’.
மோடி பந்தையம் - மந்திரத்தால் பொருளை மறைத்தலும் அதனைக் கண்டெ
டுத்தலுமாகிய உறழாட்டில் மந்திரம் செய்வோர்களுக்கிடையே நிகழும் போட்டி.
மோடி வித்தை - ஒரு வகை ஏமாற்று வித்தை.
மகிடி - மோடி
மோடி குழல் - பாம்பாட்டியின் ஊது குழல் வகை.
திரிகடுகம் - சுக்கு, மிளகு, திப்பிலி. இதில் திப்பிலியின் வேர் - மோடி.
மோடிக்காரன் - ஒப்பனை விரும்பி, பிணக்கங்காட்டுவோன், ஏய்ப்போன்.
மோடிப்புடவை - வெண்ணிறமுள்ள புடவை.
மோடிமோதிரம் - பவுசான மோதிரம்
மோடி வைத்தல்- கேடு விளைவிப்பதற்காகப் பாழ் பொருளைப் புதைத்து வைத்தல்.
மோடி விளையாட்டு - ஒரு கிராமத்து விளையாட்டு இது. ஒருவன் மணல் மேட்டுக்குள் ஒரு முட்டையை மறைத்து வைத்து ஏழுவாிகளை வரைவான். அந்த முட்டையைக் கண்டுபிடிப்பவனே மோடி. சூடாமணி நிகண்டு சக்தி என்பதற்கு காாி தாய், கொற்றி, மாாி, சூாி, முதணங்கு, காடுகாள், மோடி என்பதாக பொருள் தருகிறது.
மோடிசை வெற்பென -
மோடாமோடியாய்ச் செலவு செய்வது அதாவது கணக்கில்லாமல் செலவு செய்வது.
மோடி என்பதன் வேர்ச்சொல் - முகடு.
அகடு × முகடு (பள்ளம் × மேடு).
முகடு - உச்சி, மேலிடம், கூரை.
முகடு என்பதே மோடு என்றாகி மோடி என்பதாகத் திரிந்துள்ளது.
மோடி என்பதற்கு கதிரை வேற்பிள்ளை அகராதி காடுகாள், பிணக்கு, மேட்டிமை, மெளடி, வேடிக்கை, வனத்தில் வாழும் காளி என்பதாகப் பொருள் தருகிறது.
இதிலிருந்து பாரதியார் கண்ணன் பாட்டில் குறிப்பிடும் மோடி என்பது பிணக்கு என்பதாகப் பொருள் கொள்ளலாம்.