internet

img

பழைய சொல், புதிய தேடல் ‘கொந்தர்’ - அண்டனூர் சுரா

மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளைக்கிணற்றுக்குள் விழுந்த 2 வயதுடைய சுஜித் , 4 நாள் போராட்டத்துக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டான். நவீன தொழில்நுட்பமும், உரிய கருவிகளும் இல்லாததால்தான் இத்துயரம் நேர்ந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் சந்தோஷ்பாபு, ‘ ஆழ்துளைக் கிணறுகளில் விழும் குழந்தையைப் பாதுகாப்பாக மீட்க நவீன கருவிகளைக் கண்டுபிடிக்க ஹேக்கத்தான் போட்டி நடத்தப்பட்டு, சிறந்த கண்டுபிடிப்பாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 இலட்சம் வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையின் மூலம் பரிந்துரை செய்துள்ளோம் என்றார்.

ஹேக்கத்தான் ( HACKATHON ) என்பது என்ன?
 

ஹேக்கத்தான், பிரதமர் நரேந்திர மோடியின் ‘ஸ்மார்ட் இண்டியா’ என்கிற திட்டத்துடன் தொடர்புடைய ஒரு சொல். கடந்த செப்டம்பர் மாதம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ), சிங்கப்பூரைச் சேர்ந்த நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தியா-சிங்கப்பூர் ஹேக்கத்தான் 2019 சென்னை ஐஐடியில் நடத்தியது. Hackathon, இச்சொல் Hack+ Marathon இவ்விரு சொற்களின் சேர்க்கை. மாரத்தான் , கிரேக்க நாட்டுடன் தொடர்புடைய சொல். புளூடார்ச் எழுதிய ON THE GLORY OF ATHENS என்கிற நூலில் இப்படியாக ஒரு குறிப்பு உண்டு. கிமு 490 இல் கிரேக்கர் - பாரசீகர்களுக்கு இடையிலான போரில் கிரேக்கப்படை வெற்றிபெற  பெய்டிபைட்ஸ் என்கிற வீரன், மாரத்தான் நகரிலிருந்து ஏதென்ஸ் நகருக்கு வெற்றிச் செய்தியைக் கொண்டோடினான். இவ்விரு நகருக்கும் இடைப்பட்ட தூரம் 34.5 கிமீ. ஒரு மூச்சில் இலக்கைத் தொடுவது மாரத்தான். 1896 ஆம் ஆண்டு மாரத்தான் ஓட்டப்பந்தையம் ஒலிம்பிக்கில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. பிறகு 1924 ஆம் ஆண்டு முதல் அப்போட்டியின் தூரம் 42.195 கிமீ என அதிகரிக்கப்பட்டது.

இலக்கியத்தில் ஹேக் என்றொரு  சொல் உண்டு. hack writer - கூலிக்காக எழுதுபவர்; hack work - நூல் வெளியீட்டிற்குச் செய்யும்  இலக்கிய கூலி வேலை . Hack என்பதற்கு லிப்கோ அகராதி துண்டம் துண்டாக வெட்டுவது, வாடகைக்குதிரை, சலிப்புத்தரும் வேலையைத் தொடர்ந்து செய்பவர் அல்லது செய்ய அமர்த்தப்பட்டவர் என்பதாக பொருள் தருகிறது. Hacking கணினி, ஆண்ட்ராயடு வருகைக்குப்பின் பிரபலமடைந்த ஒரு சொல். கனடா தொராண்டோ பல்கலைக்கழக  பேராசிரியர் வெங்கடரமணன், கணினி நிரல்களைக் கள்ளத்தனமாக திருடுதல் அல்லது கணினி நிரல்களை நச்சு நிரலிகள் (வைரஸ்) மூலமாக அழிப்பவர்களை (Hacker) ‘கொந்தர்’ என்கிற சொல்லாட்சியால் அழைத்தார். கொந்து என்கிற சொல்லிருந்து திரிந்தது கொத்து. அம்மி கொந்துதல்; பறவை தன் அலகால் கனிகளைக் கொந்துதல் (கொத்துதல்).

கொந்துதல் என்பதற்கு கச்சிதமாக வெட்டுதல் அல்லது கொத்துதல் என்று பொருள். கணினியின் ஒரு நிரலை அழிக்கக்  நச்சுநிரலியை கண்டுபிடிப்பவர், அந்த நச்சுநிரலியிலிருந்து கணினியைக் காக்க மாற்று நிரலியைக் கண்டுபிடிப்பவர் இருவரும் Hacker (கொந்தர்)தான். முன்னவர் Black hacker என்றும் பின்னவர் White hacker என்றும் கணினித் துறையினரால் அழைக்கப்படுகிறார்கள். கறுப்பு கொந்தரின் அடையாளச் சின்னம் முகமூடி. வெள்ளை கொந்தருக்கு வெண்தொப்பி. ஆழ்குழாய் கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்டெடுக்க முயலும் கருவி வடிவமைப்பினர் ‘வெள்ளை கொந்தர்’ வகையைச் சார்ந்தவர். மணவை முஸ்தபா தொகுத்த  கணினி களஞ்சியப் பேரகராதி hack என்பதற்கு கணினி நிரலிலுள்ள கட்டளைகளை அவசரகோலமாய் மாற்றியமைத்தல்; படைப்பாக்கக் கூர்மதியுடன் ஒரு சிக்கலை அல்லது ஒரு திட்டப்பணியை அணுகுதல் ; ஓர் இயக்க முறைமை அல்லது ஒரு பயன்பாட்டுத் தொகுப்பின் கட்டளையைத் திருத்தி அதன் இயல்பான செயல்பாட்டை மாற்றியமைத்தல் என்கிறது. மேலும் இந்த அகராதி Hacker -  ஆர்வலர், குறும்பர் என்பதாகப் பொருள் தருகிறது. ஹேக்கத்தான் என்பது கொந்தர் மாரத்தான். அதாவது குறுகிய கால இடைவெளியில் ஒரு கருவியை கணினி வழியில் திட்டமிட்டு வடிவமைப்பவர்.