india

img

மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி தருவதில் பெரும் முறைகேடு! ஒன்றிய அரசு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு!

மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் வாங்கியது தொடர்பாக ஒன்றிய அரசு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதில் பெரும் முறைகேடு நடைபெற்றிருப்பது அம்பலமாகியுள்ளது.

பெருமளவில் நடந்த மருத்துவ கல்லூரி அனுமதி முறைகேடு தொடர்பாக போலிசாமியார் உட்பட ஒன்றிய அரசு அதிகாரிகள் 34 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

சத்தீஸ்கர் ராய்ப்பூரில் போலி சாமியார் ரவிசங்கர் மஹாராஜ் மருத்துவ கல்லூரிக்கு சான்றுதர கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேசிய மருத்துவ கல்வி ஆணையத்திலிருந்து ஆய்வுக்கு வருபவர்களை முன்கூட்டியே அறிந்து ரவிசங்கர் லஞ்சம் கொடுத்துள்ளார்.

ஆய்வுக்கு வரும் என்எம்சி அதிகாரிகளை கண்டறிய ரவிசங்கர் மஹாராஜுக்கு முன்னாள் யூஜிசி தலைவர் டி.பி சிங் உதவியுள்ளார்.

டி.பி சிங் தற்போது மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சைன்ஸ் பல்கலை.யின் வேந்தராக உள்ளார்.

ஆய்வுக்கு வரும் அதிகாரிகளில் விவரங்களை பெற போலி சாமியார் ரவிசங்கர் மஹாராஜ் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் கொடுத்துள்ளார்.

ஆய்வின்போது ஆந்திரா, தெலுங்கானாவில் இருந்து மருத்துவர்களை அழைத்துச் சென்று பேராசிரியர்களாக நடிக்க வைத்தது அம்பலமாகியுள்ளது.

போலி சாமியார் மஹாராஜ் கல்வி நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் வாங்கிய என்எம்சி மருத்துவர்கள் 3 பேர் உட்பட 8 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

ரூ. 55 லஞ்சம் வாங்கிக் கொண்டு போலி சாமியார் மஹாராஜ் மருத்துவ கல்லூரிக்கு சாதகமாக அறிக்கை தந்ததையும் சிபிஐ கண்டறிந்துள்ளது.

ஒன்றிய சுகாதாரத் துறையைச் சேர்ந்த 8 அதிகாரிகள் சிண்டிகேட் அமைத்து பெரும் முறைகேடுகளை அரங்கேற்றியுள்ளனர்.மருத்துவ கல்லூரி முறைகேடுகள் மூலம் ஒன்றிய சுகாதாரத்துறை அதிகாரிகள் 8 பேரும் கோடிக்கணக்கில் சுருட்டியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஒவ்வொரு ஆய்வின்போதும் லட்சக்கணக்கில் லஞ்ச பணத்தை ஹவாலா பரிவர்த்தனை மூலம் ஒன்றிய அரசு அதிகாரிகள் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,  லஞ்சம் தரும் மருத்துவ கல்லூரிகளுக்கு குறிப்பிட்ட அதிகாரிகளை ஆய்வுக்கு அனுப்பி அறிக்கை தயாரித்ததையும் சிபிஐ கண்டிபிடித்துள்ளது.

ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் பூனம் மீனா, தரம்வீர் ப்யூஸ் மால்யா உள்ளிட்டோரை  சிபிஐ குற்றவாளிகளாக சேர்த்துள்ளது.பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகளிடம் இருந்தும் ஒன்றிய அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கியுள்ளனர்.

ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்திலேயே பெரும் முறைகேடு நடந்திருப்பது பற்றி சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.