புதுதில்லி:
பிரதமர் மோடி கடந்த திங்களன்று இரவு 8.56 மணிக்கு, டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.“வருகின்ற மகளிர் தினத்தன்று (மார்ச் 8 ஞாயிற்றுக்கிழமை), தனது வாழ்க்கை மற்றும் பணியின் மூலம்நமக்கு முன்மாதிரியாக விளங்கும் பெண்களுக்காக எனது சமூக வலைதள கணக்குகளை அர்ப்பணிக்க உள்ளேன். இது லட்சக்கணக்கான பெண்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும். நீங்கள் அதுபோன்ற பெண் என்றாலோ அல்லது முன் உதாரணமாக விளங்கும் பெண்களை உங்களுக்கு தெரியும் என்றாலோ, அதுபோன்ற சாதனைப் பெண்களின் கதையை பகிர்ந்துகொள்ளுங்கள்” என்று அந்தப் பதிவில் கூறியிருந்தார். மோடியின் இந்த பதிவு, ஒரு விளம்பரம் தேடும் முயற்சி என்றும், நாடகம் என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
அந்த வகையில், மகளிர் காங்கிரஸ் தலைவரும், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளருமான சுஷ்மிதா தேவும், மோடியின் அறிவிப்பை கிண்டலாக சாடியுள்ளார்.“மோடிஜி, உன்னாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணிடம் உங்களின் சமூக வலை தள கணக்குகளை ஒப்படைக்கலாம்; ஏனெனில், உங்கள் கட்சியில் இருப்பவர்களால் பல தாக்குதல் களை எதிர்கொண்டவர் அவர். துணிச்சல் மிகுந்தவர் மற்றும் தகுதியானவர்” என்று சுஷ்மிதா தேவ் குறிப்பிட்டுள்ளார்.