ரங்காரெட்டி:
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி அருகே பெண் வட்டாட்சியர் ஒருவர் அவரது அலுவலத்தில் வைத்தே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்துல்லாபூர் வட்டாட்சியராகப் பணிபுரிந்து வந்தவர் விஜயாரெட்டி. கடந்த சில நாட்களாக நிலப் பிரச்சனை தொடர்பாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இன்றும் அலுவலகத்திற்கு வந்து விஜயா ரெட்டியுடன் பேசிக் கொண்டிருந்தார்.சிறிது நேரத்தில் வட்டாட்சியர் விஜயா உடல் முழுவதும் தீப்பற்றி எரிய வெளியே ஓடிவந்தார். அவருடன் பேசிக்கொண்டிருந்த நபரும் தீக்காயங்களுடன் வெளியே ஓடிவந்து அருகிலிருந்த காவல்நிலையம் சென்று சரணடைந்தார். அந்த நபர் விஜயா ரெட்டி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் விஜயாரெட்டி தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நிலம் தொடர்பான பிரச்சனையை தீர்த்துவைக்க விஜயா ரெட்டி கையூட்டு கேட்டதாகக் கூறப்படும் நிலையில், சரணடைந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.