tamilnadu

img

உலகம் முழுவதும் பரவும் தமிழ் மொழி - ஐவி.நாகராஜன்

1956-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ம் நாள் தமிழ் ஆட்சிமொழி மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது இந்நாள் ஒரு நன்னாள் என்று வரவேற்று பேசியவர் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பி.ராமமூர்த்தி ஆவார். அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தில் தமிழே ஆட்சிமொழியாக வேண்டுமென்று பேசியவரும் அவரே. இந்தி மொழியா, ஆங்கில மொழியா? என்ற விவாதம் முன்னுக்கு வந்தபோது தமிழுக்கே முன்னுரிமை வேண்டுமென கேட்டு தமிழகத்தில் தமிழே தலைமை தாங்க வேண்டுமென சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் முழங்கியவர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் பி.ராமமூர்த்தி, ஜீவானந்தம், எம்.ஆர்.வெங்கட்ரான், ஏ.பாலசுப்பிரமணியம், என்.சங்கரய்யா போன்ற தலைவர்கள் ஆவார்கள். நாடாளுமன்றத்தில் வாதாடி தமிழில் தந்தி தருவதை நடைமுறை சாத்தியமாக்கிவயவர் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த ஏ.நல்லசிவன் ஆவார்.

அதன் தொடர்ச்சிதான் இன்று கண்டம் விட்டு கண்டம் தமிழ் மொழி பரவி வருவதை நம்மால் பார்க்கமுடிகிறது. உலகில் எங்கெங்கு நிலப்பரப்பு உண்டோ அங்கெல்லாம் தமிழ் உச்சரிப்பு கேட்டுக்கொண்டுதான் இருக்கும். இது ஒரு தமிழ் ஆர்வலர் சொன்ன வாசகம். அது உண்மை என்பதை நிரூபிக்கும்படியான செய்தி ஒன்றை இங்கே குறிப்பிட வேண்டும். அதாவது ஆஸ்திரேலிய பள்ளிக்கூடங்களில் அன்மையில் தமிழை இரண்டாம் மொழியாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது சாதாரண விஷயமல்ல. தமிழ் பேசும் மக்கள் மற்றும் மொழியியல் அறிஞர்களுக்கு பெரும் பெருமை சேர்த்துள்ளது. உலக அளவில் தமிழ் மொழியின் சிறப்பு கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல. தென்னிந்திய மாநிலங்களில் பெரும் பான்மையினரின் தாய்மொழியாகவும் தமிழ் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். மேலும் இந்தியாவின் பிற மாநிலங்களான கர்நாடகம், கேரளம், மற்றும் மகராஷ்டிராவிலும் பெருமளவில் நம் தமிழ் பேசப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் உலகமுழுவதுமே பல கண்டங்களில் தாய்த் தமிழ்மொழி வழக்கில் உள்ளது. அதில் குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ், போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தமிழ் பேசும் மக்களும் உள்ளனர். தமிழ் மொழிக் கல்வியும் உள்ளது. அரசு மொழிகளில் ஒரு மொழியாகவும் தமிழ் விளங்குகிறது. 

ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், ஐக்கிய அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் தமிழ் மொழி விருப்பப்பாடமாக உள்ளது. மலேசியாவில் தொடக்க, இடைநிலைப் பள்ளிகளில் தமிழ்விடாமல் கற்பிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் தமிழ் மொழியும் ஒரு பாடமாக கற்றுத்தரப்படும் என்று நியூ சவுத் மாகாண அரசு அன்மையில் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மேலும் இதுதொடர்பான தமிழ் மொழி பாடம் உள்ளடங்கிய புதிய பாடத்திட்டத்தையும் அம்மாகாண அரசு தற்போது வெளியிட்டுள்ளது. நீயூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும்  1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலும் இரண்டாவது மொழி பாடமாக தமிழ் மொழிப்பாடம் பயிற்றுவிக்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி உள்ள நம்முடைய தாய் தமிழ் மொழியின் சிறப்பை சொல்ல வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம்.