உலக அளவில் இந்தி திணிப்புக்கு எதிரான ஸ்டாப் இந்தி இம்போஷிசன் ஹேஷ்டேக் இன்று ட்ரெண்டாகி உள்ளது. மேலும் தேசிய அளவில் முதல் இடத்தில் உள்ளது. அதேபோல், #TNAgainstHindiImposition என்ற ஹேஷ்டாக்கும் டிரெண்டாகி வருகிறது.
மோடி அரசு 2வது முறையாக பதவியேற்ற பிறகு
புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் மீண்டும் இந்தி திணிப்பை மத்திய அரசு மேற்கொள்ள முயற்சித்து வருகிறது. இது பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவிலான புதிய கல்வி கொள்கை தொடர்பாக முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு மத்திய அரசுக்கு அளித்துள்ள பரிந்துரையில் இந்தி திணிப்பு தொடர்பான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மாணவர்களுக்கு தாய் மொழி , ஆங்கிலம்மற்றும் அரசியல் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட பிற இந்திய மொழிகளில் ஒன்று என மும்மொழி கொள்கையை தேசிய அளவில் அமல்படுத்த வேண்டும் என்று அந்த குழு பரிந்துரைத்துள்ளது.
3வது மொழியாக இந்தி பேசும் மாநிலங்களில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் ஒன்றையும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை 3வது மொழியாகவும் கற்பிக்க வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் குழு கூறியுள்ளது. இதனை மத்திய அரசு அமல்படுத்தினால் தமிழகம் உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களில் இந்தி திணிக்கப்படும் ஆபத்து உருவாகியுள்ளது. இது மட்டுமின்றி தேசிய அளவில் கல்வி ஆணையம் அமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அமைக்கப்பட்டால் மாநிலங்களின் உரிமைகள் பறிபோகும் ஆபத்து இருப்பதாக கல்வியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு திமுக,சிபிஎம் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன
தேசியளவில் ஹிந்தி திணிப்பு ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட்
இந்நிலையில் நெட்டிசன்களும் இந்தி திணிப்புக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருவதால், #StopHindiImposition என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்விட்டரில் டிரெண்டாக்கி வருகிறது. அதேபோல், #TNAgainstHindiImposition என்ற ஹேஷ்டாகும் டிரெண்டாகி வருகிறது. இவ்விரு ஹேஷ்டேக்குகளும் தேசிய அளவில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது. இந்தி திணிப்பை தமிழகம் ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறது என்பதை ஒட்டு மொத்த இந்தியாவிற்கு மட்டுமல்லாமல், உலகிற்கே ஹேஷ்டேக்கள் மூலம் நெட்டிசன்கள் எடுத்துரைத்துள்ளனர். தமிழகத்தில் எந்த அளவிற்கு எதிர்ப்புகள் கிளம்பியதோ அதன் வீரியத்தை நெட்டிசன்கள் இணையத்தில் பிரதிபலிக்கச் செய்துள்ளனர்.
வட மாநில மக்களும், வெளிநாட்டு வாழ் தமிழர்கள் பலரும் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமெரிக்கா, பிரிட்டன், சௌதி, ஜப்பான், கென்யா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களும், இது குறித்து ட்வீட் செய்து, இங்கு நடக்கும் எதிர்ப்புகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.