புதுதில்லி:
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவம்பர் 17-ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக 5 முக்கிய வழக்குகளில் அவர் தீர்ப்பு வழங்கு வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலத்தின் உரிமை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு, அவற்றில் முதன்மையானதாகும்.பாபர் மசூதி மற்றும் அதனையொட்டிய 2.77 ஏக்கர் நிலத்திற்கு, சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அரோரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் உரிமை கொண்டாடிய நிலையில், வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் 2.77 ஏக்கர் நிலத்தை 3 தரப்பினரும் சரிசமமாகப் பிரித்துக் கொள்ளுமாறு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து 14 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களைத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் எஸ்.ஏ. பாப்டே,டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்.ஏ. நசீர்ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதியில் இருந்து நாள்தோறும்விசாரணை நடத்தி, அனைத்து தரப்பு வாதங்களும்முடிந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்றுரஞ்சன் கோகோயும் இடம்பெற்ற உச்ச நீதிமன்ற அமர்வுதான் கடந்த 2018-ஆம் ஆண்டுசெப்டம்பரில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பைஎதிர்த்து 65 சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவற்றின் மீதும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
இவை தவிர, ரபேல் ஊழல் வழக்கு, ரபேல்விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத்தவறாக திரித்துக் கூறியதாக ராகுல் மீதுதொடரப்பட்ட வழக்கு, கடந்த 2017-ஆம் ஆண்டைய நிதி மசோதாவின் அரசியலமைப்பு செல்லுபடி தொடர்பான வழக்கு ஆகியவற்றிலும் ரஞ்சன் கோகோய் அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.