tamilnadu

img

சாமானிய மக்களின் நம்பிக்கையை குலைத்துவிட்டார்... ரஞ்சன் கோகோய் மீது நீதிபதிகள் கடும் விமர்சனம்

புதுதில்லி:
மத்திய பாஜக அரசு வழங்கிய, நியமன எம்.பி. பதவியை, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், சிறு மறுப்பு கூட தெரிவிக்காமல் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், சக ஓய்வுபெற்ற நீதிபதிகள், அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“நான் 20 ஆண்டுகள் வழக்கறிஞராகவும், 20 ஆண்டுகள் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளேன். ஆனால், எனது நீண்ட அனுபவத்தில், ரஞ்சன் கோகோய்போன்ற சிறிதும் வெட்கமற்ற, இழிவான ஒரு நீதிபதியை தான் பார்த்ததில்லை. பாலியல் வக்கிரங்களை கொண்ட ரஞ்சன் கோகோயிடம் இல்லாத கெட்ட குணங்கள் எதுவுமில்லை. அப்படி ஒருமோசமான, முரட்டுக்குணம் இந்திய நாடாளுமன்றத்தை அலங்கரிக்கப் போகிறது” என நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கடுமையாக விமர்சித்துள்ளார்.“ரஞ்சன் கோகோய் ஏதேனும் பதவி வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுவார் என்பது எதிர்பார்த்ததே. அதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், இவ்வளவு விரைவாக அவருக்கு பதவி வழங்கப்பட்டது ஆச்சரியமாக உள்ளது. ரஞ்சன் கோகோய்முன்பு கூறிய, நீதிமன்ற சுதந்திரம், நடுநிலைமை மற்றும் நீதியின் பெருமை ஆகியவை என்ன என்பது, இப்போது தெளிவாகத் தெரிந்துவிட்டது; இது ஒரு இடிந்து விழுந்த கோட்டை” என்று மதன் பி லோகுர் குறிப்பிட்டுள்ளார்.மற்றொரு ஓய்வுபெற்ற நீதிபதியான குரியன் ஜோசப், “ரஞ்சன் கோகோய் மாநிலங்களவை நியமனத்தை ஏற்றுக்கொள்வது நிச்சயமாக நீதித்துறையின் சுதந்திரத்தில் சாமானிய மக்களின் நம்பிக்கையை உலுக்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.