india

img

இந்திய நீதிமன்றங்களில் நீதி கிடைப்பதில்லை... உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வாக்குமூலம்....

புதுதில்லி:
“நீதிமன்றத்துக்குச் சென்றால் நீதி கிடைக்காது எனும்போது யார் நீதிமன்றத்திற்கு செல்வார்கள்?” என்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான ரஞ்சய் கோகோய் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“நீங்கள் பதவியில் இருந்தபோது, உங்கள் மீது பாலியல் புகார் வந்தது குறித்து என்று மஹூவா மொய்த்ரா என்ற எம்.பி. அண்மையில் பேசி இருந்தார். இதற்காக அவர் மீது வழக்கு ஏதும் போடுவீர்களா? என்று ரஞ்சன் கோகோயிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.அதற்கு அளித்த பதிலில்தான், “தான் நீதிமன்றம் செல்ல மாட்டேன்; அங்கு சென்றால் எனக்கு தீர்ப்பு கிடைக்காது; நான் முடிவில்லாமல் காத்திருக்க வேண்டும்” என்று - உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதி
பதியாக இருந்த ரஞ்சன் கோகோய் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் பேசியிருப்பதாவது:“என்னை குறிவைத்து பேசும் நபர்களுக்கு எதிராக நான் வழக்கு ஏதும் போடப்போவதில்லை. ஏனென்றால், நீதிமன்றத்துக்கு நான் சென்றால், எனக்கு தீர்ப்புக் கிடைக்காது.அதற்காக நான் முடிவில்லாமல் காத்திருக்க வேண்டும். இதைக் கூற எனக்குஎந்த தயக்கமும் இல்லை. 

மக்கள் நீதிமன்றத்துக்கு ஒரு வழக்குக்காகச் சென்றுவிட்டால் ஏன்தான் நீதிமன்றத்துக்கு வந்தோம்? என்று கூறும் அளவுக்கு வேதனைப்படுகிறார்கள். இப்படியிருந்தால் யார்தான் நீதிமன்றத்திற்கு செல்வார்கள்?5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியாவை நாம் மாற்ற விரும்புகிறோம். ஆனால், நீதித்துறை சீர்குலையும் நிலையில் இருக்கிறது. 2020-ஆம் ஆண்டில் மட்டும் புதிதாக கீழ் நீதிமன்றங்களில் மட்டும் 60 லட்சம் வழக்குகள் வந்துள்ளன. உயர் நீதிமன்றங்களில் மட்டும் 7 லட்சம் வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் 7 ஆயிரம் வழக்குகள் வந்துள்ளன. துணை நீதிமன்றங்களில் சுமார் 4 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. உயர் நீதிமன்றங்களில் 44 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளும், உச்ச நீதிமன்றத்தில் 70 ஆயிரம் வழக்குகளும் நிலுவையில் உள்ளன என்பதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நீதிபதிகள் நியமனம் விரைவாக நடைபெறுவது இல்லை. அரசுப்பதவிகளில் அதிகாரிகளை நியமிப்பது போல நீதிபதிகளை நியமிக்கவில்லை. நீதிபதிகளைத் தேர்வு செய்வதிலும், பயிற்சி அளிப்பதிலும் மாற்றம் கொண்டுவருவது  தேவைப்படுகிறது.நீதித்துறையை மேம்படுத்த செயல்திட்டத்தை வகுக்க வேண்டும். இதற்கான செயல்திட்டம் என் மனதில்இருக்கிறது. நீதிபதி பணி என்பது முழுநேரப் பணி, அர்ப்பணிப்புப் பணி. இதற்கு காலநேரம் இல்லை. 24 மணிநேரமும் பணியாற்ற வேண்டும்.இவ்வாறு கோகோய் தெரிவித்துஉள்ளார்.