புதுதில்லி:
தேசிய குடிமக்கள் பதிவேடு எதிர்காலத்திற்கான அடிப்படை ஆவணமாக இருக்கும் என்று உச்ச நீதிமன்றத்தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கருத்து தெரிவித்துள்ளார்.தில்லியில் நடைபெற்ற புத்தகவெளியீட்டு விழாவில், இதுதொடர்பாக பேசியிருக்கும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், தேசிய குடிமக்கள் பதிவேடு வருங்காலத்திற்கான ஓர் அடிப்படை ஆவணம் என்றும், சட்ட விரோதமாக குடியேறியவர்களின் எண்ணிக்கையை அறிய வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
குடிமக்கள் பதிவு நடத்துவது புதியநடைமுறை அல்ல என்றுக் குறிப்பிட்டிருக்கும் அவர், ஏற்கெனவே, 1951-ஆம்ஆண்டு நடத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டின் புதுப்பிப்புதான் இந்த நடவடிக்கை என்றும், இதன்மூலம், சட்ட விரோதமாக குடியேறியவர்களால் ஏற்படும் கலவரம், வன் முறைகளை கட்டுப்படுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.
பல நூற்றாண்டுகளாக- தலைமுறை தலைமுறையாக வசித்து வரும்இஸ்லாமியர்களை - திடீரென சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி,அவர்களை அகதிகளாக்கும் சூழ்ச்சியாகவே தேசிய குடிமக்கள் பதிவேட்டுத் திட்டத்தை மத்திய பாஜக அரசு கையில் எடுத்துள்ளது. அத்துடன், அசாம் மாநிலத்திற்கு மட்டுமேயான தேசியக் குடிமக்கள் பதிவேட்டை(NRC-National Register of Citizens),தற்போது நாடு முழுவதும் அமல்படுத்தவும் முடிவு செய்துள்ளது. அதற்காக,குடியுரிமைத் திருத்தச் சட்ட முன்வடிவையும் (Citizenship Amendment Bill-CAB) நாடாளுமன்றத்தில் கொண்டுவந்துள்ளது.இந்நிலையில், நவம்பர் 17-ஆம் தேதியுடன் ஓய்வுபெறவுள்ள உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், தேசிய குடிமக்கள் பதிவேடுதான் (NRC) இந்திய குடிமக்களுக்கான ஆவணமாக இருக்க முடியும்என்று வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார்.