tamilnadu

img

ஜனாதிபதி ஆட்சி என்பது மக்களை ஏமாற்றும் செயல்!

புதுதில்லி:
மகாராஷ்டிர மாநிலத்தில், குடியரசுத் தலைவரின் ஆட்சிக்குப் பரிந்துரைந்த, அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியின் முடிவு அவசரமானது என்று மத்திய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் தெரிவித்துள்ளார்.
“குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது கடைசி வாய்ப்புதான். சிவசேனா கட்சி ஆட்சி அமைப்பதற்கு, மகாராஷ்டிர ஆளுநர் 3 நாட்கள் அவகாசம் கொடுத்திருக்க வேண்டும். 24 மணி நேரம் மட்டுமே கொடுக்க வேண்டிய அளவுக்கு என்ன அவசரம்? என்று தெரியவில்லை. இது வாக்களித்த மக்களையும், வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்களையும் ஏமாற்றும் செயல்” என்று பராசரன் கூறியுள்ளார்.இதேபோல, மும்பையைச் சேர்ந்த அரசியல் சட்ட வல்லுநர் உல்ஹாஸ் பபட் அளித்துள்ள பேட்டியில், “ஆளுநரின் முடிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பாஜக-வுக்கு 2 நாட்கள் அவகாசம் கொடுத்த ஆளுநர், மற்ற 2 கட்சிகளுக்கும் 24 மணி நேரம் மட்டுமேகொடுத்தது ஒருசார்பான அணுகு முறை” என்று விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியின் நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கு எதிரானது” என்றும், குறிப்பாக, 4 தவறுகளை ஆளுநர் இழைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.“1. தேர்தலுக்கு முந்தைய கூட் டணி அடிப்படையில் தனிப்பெரும் கட்சியை அதாவது பாஜக - சிவசேனாவைஇணைந்து ஆட்சி அமைக்க அழைத் திருக்க வேண்டும். 2. இரண்டாவது பெரிய கட்சி என்ற அடிப்படையில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸை இணைந்து அழைத்திருக்க வேண்டும். 3. தனிப்பட்ட கட்சிகளைத்தான் அழைக்க வேண்டும் என்றால், காங்கிரசுக்கும் ஆளுநர் அழைப்பு விடுத்திருக்கவேண்டும். 4. பாஜக-வுக்கு 48 மணிநேரம் அவகாசம் என்றால், சிவசேனா; என்சிபி கட்சிகளுக்கும் அதே அவகாசம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்”- ஆனால், இவை எதனையும் ஆளுநர் செய்யவில்லை என்று சுர்ஜேவாலா கூறியுள்ளார்.