tamilnadu

img

மோடி அறிவித்த நிதித் தொகுப்பு 4 லட்சம் கோடி ரூபாய் தான்....

புதுதில்லி:
பிரதமர் நரேந்திர மோடி, மே 12 இரவு,கொரோனா ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக பேசினார். அப்போது, இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதித் தொகுப்பை படோடோபமாக அறிவித்தார். இதற்கு ‘ஆத்மநிர்பார் பாரத் அபியான்’ என்று புதிய நாமகரணம் ஒன்றையும் சூட்டினார். உலக வங்கியின் தரவுகள்படி இந்தியாவின் மொத்த ஜிடிபி 2.7 ட்ரில்லியன் டாலர்.இந்திய ரூபாய் மதிப்பில் சுமாராக 202 லட்சம்கோடி ரூபாய் ஆகும்.

இதில் சுமார் 10 சதவிகிதத்தை, பிரதமர் மோடி ஒதுக்கீடு செய்ததை, பலரும் ஒரு பிரம்மாண்ட நடவடிக்கையாக பார்த்தனர். பிரதமர் மோடி எதையோ தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது போல பாஜகவினரும், பாஜக ஆதரவு ‘பொருளாதாரப் புலி’களும் ஊடகங்களில் கூப்பாடு போட்டனர்.மறுபுறத்திலோ, மோடி விடுவிப்பதாகக் கூறியுள்ள ரூ. 20 லட்சம் கோடி நிதி எங்கேஇருக்கிறது? தற்போது கையில் இல்லை என்றால், பிறகு எவ்வாறு அதனை திரட்டப் போகிறார்? வரி போடப் போகிறரா, கடன் வாங்கப் போகிறாரா என்று கேள்விகள் எழுந்தன. ஆனால், அவை எதற்கும் மத்திய அரசு பதில் தரவில்லை.இந்நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனம், “பிரதமர் மோடி அறிவித்த ரூ. 20 லட்சம் கோடி புதிதாக எங்கிருந்தோ வரப் போகும் தொகையல்ல, ஏற்கனவே அறிவித்து இருக்கும் திட்டங்கள் மற்றும் ஆர்பிஐகொடுத்த லிக்விடிட்டி பணம் + இனி அறிவிக்க இருக்கும் திட்டங்கள் எல்லாம் சேர்த்துத்தான் இந்த 20 லட்சம் கோடி” என கணக்கு ஒன்றைக் கூறியது.இதையே, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடும்,வழிமொழிந்துள்ளது. 20 லட்சம் கோடி ரூபாய் என்றெல்லாம் கூறினாலும், சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மோடி அரசு செலவிட உள்ளதாக உண்மையைப் போட்டு உடைத்துள்ளது.

முதற்கட்ட ஊரடங்கு அறிவித்த பின், மார்ச் 27 அன்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1.7 லட்சம் கோடிக்கு பலநலத் திட்டங்களை அறிவித்தார். 20 லட்சம்கோடியில் இது கழிக்கப்படும். மீதி 18.3 லட்சம்கோடி இருக்கும்.மத்திய ரிசர்வ் வங்கி தன், கையிருப்புவிகிதத்தை (Cash Reserve Ratio) குறைத் தது, விளிம்பு நிலை வசதி (Marginal Standing facility) அதிகரித்தது. இலக்கு நீண்ட கால ரெப்போ செயல்பாடுகள் (Targeted Long Term Repo Operations - TLTROs)... சிறப்பு பணப்புழக்க வசதிகளைமியூச்சுவல் பண்டுகளுக்கு வழங்கியது உட்பட மற்ற பணப்புழக்க செயல்பாடுகள்... என எல்லாம் சேர்த்து மொத்தம் 8.04 லட்சம்கோடி ரூபாய் மதிப்பிலான நிதி ஊக்குவிப்புத்திட்டங்களை அறிவித்தது.18.3 லட்சம் கோடி ரூபாயில், இந்த 8.04 லட்சம் கோடி ரூபாயும் கழிக்கப்படும். கடைசியில் 10.26 லட்சம் கோடி ரூபாய்.இந்த தொகையும் கையில் இல்லை. மத்திய அரசு கடன் மூலமோ, வரிகள் மூலமோ திரட்ட வேண்டும். அதற்காகத்தான் கடன் வாங்குவதற்கான இலக்கை 12 லட்சம் கோடிரூபாயாக உயர்த்தி கடந்த வாரம் மோடி அரசுஅறிவித்தது. அதன்படி, 12 லட்சம் கோடி ரூபாயை கடன் வாங்கினாலும், அரசின் வழக்கமான செலவுகளுக்கு 7.8 லட்சம் கோடி ரூபாய் போய் விடும். இறுதியில் சுமார் 4 லட்சத்து20 ஆயிரம் கோடிதான் எஞ்சி நிற்கும்.

அதாவது ரூ. 20 லட்சம் கோடி ரூபாய் நிதித் தொகுப்பு என்று கூறினாலும் உண்மையில் 4.2 லட்சம் கோடிதான் செலவிடப்பட உள்ளது; என்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு கூறியுள்ளது. ஆனால், இதுவும் ஏழைகளுக்குக் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்.