tamilnadu

img

மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்த நபர் கைது.... தில்லியில் ஆறு மாதக் குழந்தையிலிருந்து மூதாட்டி வரை எவருக்கும் பாதுகாப்பு இல்லை....

புதுதில்லி:
தலைநகர் தில்லியில், நஜப்கார் பகுதியில் திங்களன்று  90 வயது மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்து தாக்கிய   37 வயதுடைய நபரை   காவல்துறையினர் செவ்வாய்க்கிழமையன்று கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக துவாரகா காவல் துணை ஆணையர் சந்தோஷ் குமார் மீனா கூறுகையில், காவல்துறையினருக்கு சுமார் 6 மணியளவில் இச்சம்பவம் குறித்து ஒரு தொலைபேசி வந்ததாகவும், அதன்பின்னர் காவல்துறையினர் அந்த இடத்திற்குச் சென்று அக்கயவனைக் கைது செய்ததாகவும் கூறினார்.“வன்புணர்வுக்கு ஆளான மூதாட்டிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  அவருடைய வாக்குமூலம், நீதித்துறை நடுவரின் முன் பதிவு செய்யப்பட்டது,” என்று மீனா கூறினார்.

சம்பவம் குறித்து அறிந்து தில்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மலிவால், செவ்வாய்க்கிழமையன்று பாதிப்புக்கு ஆளான மூதாட்டியைச் சந்தித்து, நடந்த சம்பவம் குறித்துக் கேட்டறிந்தார். அந்த மூதாட்டி அதிகாலை 5 மணியளவில் பால்காரரின் வருகைக்காகக் காத்திருந்ததாகவும், அப்போது வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவன் வந்து, இன்றையதினம் பால்காரர் வரமாட்டார் என்றும், பால் கிடைக்கும் இடத்திற்குத் தங்களை அழைத்துச் செல்வதாகவும்  தெரிவித்துள்ளான். பின்னர் அவன் அந்த மூதாட்டியை ஒரு பண்ணைக்கு அழைத்துச்சென்று, பாலியல் வன்புணர்வு செய்துள்ளான். அவர் வலி தாங்காது சத்தம்போட்டதைக் கேட்டு, கிராம மக்கள் ஓடிவந்து அவனைப் பிடித்து காவல்துறையினருக்கு தெரிவித்தனர் என்று கூறினார். சம்பவம் குறித்து மூதாட்டியின் மகனுக்கும் தெரிவிக்கப்பட்டது.

“தலைநகர் தில்லியில் ஆறு மாதக் குழந்தை யிலிருந்து, 90 வயது மூதாட்டிவரை எவருக்கும் பாதுகாப்பு கிடையாது. மூதாட்டிக்கு ஏற்பட்டுள்ள கொடுமையைப் பார்க்கும்போது, இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மனித ஜென்மங்களே இல்லை 
என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த வழக்கு விசாரணை விரைவாக நடந்து, ஆறுமாத காலத்திற்குள் நீதி வழங்கப்பட வேண்டும்,” என்று ஸ்வாதி மலிவால் வலியுறுத்தினார். 
(ந.நி.)