மகாராஷ்டிராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் ஆடை குறித்து அநாகரீக கருத்து தெரிவித்த பாபா ராம்தேவுக்கு அம்மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து பேசிய பாபா ராம்தேவ் பெண்கள் ஆடை குறித்து அநாகரீகமான முறையில் பேசியுள்ளார். அக்கூட்டத்திலிருந்த பெண்களைப் பார்த்து, பெண்கள் புடவையில் அழகாக இருப்பார்கள் என்றும், சல்வார் உடையிலும் அழகாக இருப்பார்கள் என்றும், பெண்கள் எதையும் அணியாவிட்டாலும் அழகாக இருப்பார்கள் என்றும் அனைவரும் முகம் சுழிக்கும் வகையில் அநாகரீகமான முறையில் பேசியுள்ளார். இவரது சர்ச்சை பேச்சுக்கு எதிர்க்கட்சியினர் மற்றும் பெண்கள் அமைப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இது தொடர்பாக பாபா ராம்தேவுக்கு மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதை அடுத்து, மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணையத்திற்கு பாபா ராம்தேவ் மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளார்.
இவ்வாறு பாபா ராம்தேவ் பேசியபோது, மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸ் மற்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகனும், எம்.பி.யுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.