கொல்லம்:
ஆர்எஸ்எஸ் முன்னாள் ஊழியரான கடவூர் ஜெயன் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் என ஏற்கனவே கொல்லம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட 9 ஆர்எஸ்எஸ் குண்டர்களுக்கும் ஆயுள் தண்டனை வழங்கி அந்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தங்களது அமைப்பிலிருந்து விலகியதற்கு பழிவாங்க ஆர்எஸ்எஸ் குண்டர்களே ஜெயனை கொலை செய்தனர். கேரளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த கொடூரமான கொலை. இதில் ஜி.வினோத் (42), ஜி.கோபகுமார் (36), சுப்ரமணியன் (39), பிரியராஜ் (39), பிரணவ் (29), அருண் (34), ரஜனீஷ் (31), தினுராஜ் (31), ஷிஜு (36) ஆகிய 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு கொல்லம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி எஸ்.கிருஷ்ணகுமார் முன்பு நடந்து வந்தது.
வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடந்து நடந்த வழக்கில் நீதிபதி எஸ்.கிருஷ்ணகுமார் 9 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்து ஆயுள் தண்டனையும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். குற்றவாளிகள் உயர்நீதிமன்றத்தில் மூன்று முறை தடை உத்தரவு பெற்று வழக்கு விசாரணையை தாமதப்படுத்தினர். ஆனால் அந்த தடை ஆணைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு 7 ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை வழங்கியுள்ளது.