விசாகப்பட்டினம்
நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த மார்ச் கடைசி வாரத்திலிருந்து இன்று வரை பஸ், ரயில், விமானம் போன்ற பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. அயல்நாட்டில் இருக்கும் இந்தியர்களை மீட்க மட்டும் சர்வதேச விமான போக்குவரத்தும், வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வரக் கடந்த சில நாட்களாக ரயில் போக்குவரத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில், 25-ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானச் சேவைக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவில் இன்று காலை முதல் உள்நாட்டு விமானச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக விசாகப்பட்டினம், விஜயவாடா உள்ளிட்ட விமான நிலையங்களில் பயணிகள் வழக்கம் போல வரத்தொடங்கினர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாகப் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முககவசம், சமூக இடைவெளி தொடர்பான விதிமுறைகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற பயணிகளுக்கு அன்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் பயணிகளின் உடைமைகள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஆந்திராவில் இதுவரை 3110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 56 பேர் பலியாகியுள்ள நிலையில், 1896 பிற கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.