tamilnadu

img

சிவசேனா கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்கமாட்டோம்... அதிகாரம் வரும்- போகும்; அரசியல் உறுதியே முக்கியம்

மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சித் தலைவர் சரத் பவார், சிவசேனாவுடன் கைகோர்க்க வாய்ப் பிருப்பதாக வரும் செய்தியை திட்ட வட்டமாக நிராகரித்துள்ளார்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 102 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 61 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 163 இடங்களில் வென்றதன் மூலம்பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 54 இடங்கள், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 41 இடங்கள், சுயேட்சைகள் மற்றும் இதர கட்சிகள் 14 இடங்கள் என வெற்றி பெற்றுள்ளன. இதனிடையே, பாஜகவிடம் முதல்வர் பதவி கேட்டு மல்லுக்கட்டும் சிவசேனா, பதவிக்காக, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடனும் கூட கைகோர்க்கலாம் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.இந்நிலையிலேயே, “நாங்கள் சிவசேனா கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம்” என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்தெளிவுபடுத்தியுள்ளார். “இப்போது மக்கள் எங்களை எதிர்க்கட்சியில் அமரச் சொல்லி இருக்கிறார்கள்; அதிகாரத்தின் ஆணவத்தை மக்கள் விரும்புவதில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அதிகாரம் வரும் போகும், ஆனால் எடுத்த நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ள சரத் பவார், எதிர்க்கட்சி முகாமை விட்டு (எங்களை விட்டு) வெளியேறி, ஆளும் கட்சியில் சேர்ந்தவர்களை மக்கள் நிராகரித்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.