சென்னை, ஜன. 21 - மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்தக் கோரி செவ்வாயன்று (ஜன.21) மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், மாற்றுத் திறனாளிகள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கைதாகினர். தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 1500 ரூபாயும், கடும் ஊனமுற்றோருக்கு 2 ஆயிரம் ரூபாயும் உதவித்தொகையாக வழங்கப் படுகிறது. ஆந்திர மாநிலத்தைப் போன்று ஊனத்தின் தன்மைக்கு ஏற்ப 6 ஆயிரம், 10 ஆயி ரம், 15 ஆயிரம் ரூபாய் என உதவித்தொகை யை உயர்த்த வேண்டும்; உதவித்தொகை நிறுத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும்; விண்ணப்பித்து காத்திருப்போருக்கு விரைந்து உதவித்தொகையை வழங்கவேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத் திற னாளிகளுக்கு முழுமையாக வேலை வழங்க வேண்டும்; சட்டப்படி 4 மணி நேரம் மட்டுமே வேலை வாங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்; கூலி நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களுக்காக சிறைநிரப்பும் போராட்டத்தை தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் அறிவித்திருந்தது. இதன்படி, செவ்வாயன்று வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு 126 மையங்களில் மறியல் நடைபெற்றது. இதில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். தென்சென்னை கோட்டாட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற மறியலுக்கு மாநிலத் தலைவர் தோ. வில்சன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கே.பி. பாபு, தென்சென்னை மாவட்டச் செயலாளர் எம். குமார், பொருளாளர் லாரன்ஸ் ஆரோக்கிய சகாயராஜ், எம். சரஸ்வதி எம்.சி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் வழங்கப்படும் குறைவான உதவித்தொகை
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தோ. வில்சன், “பாண்டிச்சேரியில் 4800 ரூபாயும், தெலுங்கானாவில் 4 ஆயிரம் ரூபாய், ஆந்திராவில் 15 ஆயிரம் ரூபாய் வரையும் உத வித்தொகை வழங்கப்படுகிறது. இந்த மாநி லங்களை விட வளர்ந்த மாநிலமான தமிழகத்தில் குறைவான உதவித்தொகை வழங்குவதை ஏற்க முடியாது” என்றார். வடசென்னை திருவொற்றியூர் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு, சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பா. ஜான்சிராணி தலைமை யில் மறியல் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆர். ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கண்ணியமான வாழ்க்கைக்கு உதவாத உதவித்தொகை
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பா. ஜான்சிராணி, “உதவித் தொகை வாங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு நியாயமற்ற காரணங்களைக் கூறி திடீரென உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, நிறுத்தப்பட்ட மாதத்திற்கான தொகையையும் சேர்த்து மீண்டும் உதவித்தொகை வழங்க வேண்டும். உதவித்தொகையை உயர்த்த நிதி இல்லை என்று அரசு கூறுவதை ஏற்க முடியாது. தற்போது மாநில அரசு வழங்கும் உதவித்தொகையை கொண்டு கண்ணியமான, கவுரவமான வாழ்க்கை வாழ முடியுமா? சமூக நீதி, சமநீதி பேசும் அரசு, மாற்றுத் திறனாளிகளின் அடிப்படை வாழ்வா தார கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இந்த போராட்டத்தை தொடர்ந்து கோட்டையை முற்றுகை யிடும் போராட்டத்தை முன்னெடுப் போம்” என்றார்.
நிதிநிலைமையை காரணம் காட்டலாமா?
ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் செயல் தலைவர் எஸ்.நம்புராஜன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், தமிழக அரசு மாற்றுத் திறனாளி களுக்கு உதவித் தொகையை உயர்த்தாமல் இருப்பதற்கு நிதி நிலை மையைக் காரணமாக சொல்லலாமா? என்று கேட்டுள்ளார். மேலும் “ஆந்திரப் பிரதேச மாநிலம் பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் ஏறத்தாழ தமிழகத்தை விட பாதி அளவைக் கொண்டதுதான். 2024-25 நிதி ஆண்டில் தமிழக பட்ஜெட் 4 லட்சத்து 12 ஆயிரத்து 504 கோடி ரூபாய்க்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆந்திர பட்ஜெட் 2 லட்சத்து 94 ஆயிரத்து 427 கோடி ரூபாய்க்கு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. ஆனால், ஆந்திர அரசு தற்போது மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகையை குறைந்தபட்சம் 6 ஆயிரம் ரூபாயிலிருந்து, கடும் ஊனமுற்றோருக்கு 10 ஆயிரம் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் என உயர்த்தி வழங்கி வருகிறது. தற்போது வரை மொத்த பயனாளிகள் எண்ணிக்கை சுமார் 8.5 லட்சம். ஆனால், தமிழகத்திலோ பெரும்பா லான மாற்றுத்திறனாளிகளுக்கு 1500 ரூபாயும், மன வளர்ச்சி குன்றியோர் மற்றும் கடும் ஊனமுற்றோர் உள்ளிட்ட 5 பிரிவினருக்கு 2 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 7.37 லட்சம் பேருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதியோர், விதவை உள்ளிட் டோருக்கான சமூகப் பாதுகாப்பு உதவித்தொகை கூட ஆந்திராவில் மாதம் ஒருவருக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் உள்பட மொத்தம் சுமார் 65 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் சரிபாதிக்கும் குறைவாக சுமார் 33 லட்சம் பேருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்குவதும் குறிப்பிடத்தக்கது. எனவே, ஆந்திர மாநிலத்தைவிட அதிக வரவு செலவு செய்யும் தமிழக அரசு மிகக்குறைந்த அளவில் உதவித்தொகை வழங்குவது நியாயம் அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.