சென்னை, ஜன. 21 - மருது சகோதரர்களுக்கு சிவகங்கை யில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் திருவுருவச் சிலைகள் அமைக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (ஜன. 22) அடிக்கல் நாட்டுகிறார். இதுதொடர்பாக தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: இந்திய விடுதலைப் போரில், சிவகங்கை மாவட்டத்தில் தோன்றிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாமன்னர்கள் மருது சகோதரர்கள், வீரமங்கை வேலு நாச்சியார், வீராங்கனை குயிலி, வாளுக்கு வேலி அம்பலம் ஆகியோர் பங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்களுக்கு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் திருப்பத்தூரில் மணி மண்டபத்துடன் கூடிய சிலைகள் திறந்து வைக்கப்பட்டு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வீரமங்கை வேலுநாச்சியாரின் படைத் தளபதியாக விளங்கிய வீரத்தாய் குயிலி நினைவைப் போற்றுகின்ற வகையில், ரூ. 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட திருவுருவச் சிலையை மு.க. ஸ்டாலின் கடந்த 9.10.2024 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். சிவகங்கைச் சீமையை ஆண்ட மாமன்னர்கள் மருது சகோதரர்களுக்கு சிவகங்கையில் சிலை அமைத்து பெருமை சேர்க்க வேண்டும் என்று பல்வேறு தரப்பி னரால் கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டன. அந்தக் கோரிக்கைகளை ஏற்று, அம்மாமன்னர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில், சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் உள்ள வீரமங்கை வேலு நாச்சியார் நினைவிடம் அருகில் ரூ. 1 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்படவிருக்கும் புதிய திருவுருவச் சிலைகளுக்கு புதன்கிழமை ஜனவரி 22 அன்று சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகின்ற அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். தேனி மாவட்டம், பெரியகுளம் சுப்பராயலு - சீதாலட்சுமி இணையருக்கு 1920-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் நாள் பிறந்தவர் கவிஞர் முடியரசன். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், காரைக்குடியில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் திருவுருவச் சிலைக்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். மாமன்னர் மருது பாண்டியர்களின் உற்ற நண்பராக விளங்கிய சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் அவர்கள் தென் தமிழ்நாட்டில் கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் வெள்ளையர்களின் எதேச்சதிகாரத்தை எதிர்த்துப் போரிட்டவர். அந்தச் சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலத்தின் நினைவைப் போற்றி அவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில், சிவகங்கை மாவட்டத்தில் அன்னாரின் வாரிசுகள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய நகரம்பட்டியில் ரூ. 50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சிலையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.