சென்னை,ஜன.30- தமிழகத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது, வாக்காளர்களுக்கு கொடுக்க ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் புதுச்சேரி எம்.பி.யிடம் சிபிசிஐடி போலீசார் 10 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது, பணப்பட்டு வாடாவை தடுப்பதற்கு தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது. அப்போது சென்னை-நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பணம் கொண்டு செல்லப்பட்ட தகவல் அறிந்து, பறக்கும் படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் அந்த ரயிலை நிறுத்தி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சிக்கிய கணக்கில் வராத ரூ.4 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த பணத்தை எடுத்து வந்திருந்த 3 பேரை தாம்பரம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ரூ.4 கோடி பணம் நெல்லை மக்களவை தொகு தியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்ற தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. நயினார் நாகேந்திரன், பாஜக நிர்வாகி கேசவ விநாயகம் உள்பட 25 பேரை சிபிசிஐடி போலீசார் தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். சம்மன் அனுப்பியும் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பான விசார ணைக்கு ஆஜராகுமாறு புதுச்சேரி பாஜக தலைவரும், எம்.பி.யுமான செல்வ கணபதிக்கு சென்னை சிபிசிஐடி போலீஸார் கடந்த அக்டோபர் மாதம் சம்மன் அனுப்பி இருந்தனர். அப்போது அவர் 3 மாதம் அவகாசம் கேட்டிருந்தார். இந்நிலையில், அவகாசம் முடிவடைந்து அவர், சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி போலீசார் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர். விசார ணைக்கு பின்னர் மீண்டும் அழைத்தால் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் சிபிசிஐடி போலீசார் அவரை அனுப்பி வைத்துள்ளனர்.