தியாகச் செம்மல் வ.உ.சி.யை போற்றுகிறோம்!
‘கப்பலோட்டியத் தமிழன்’ வ.உ. சிதம்பரனாரின் 89-ஆவது நினைவு நாளை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமது சமூகவலைதளப் பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். “ஆங்கிலேயரின் கப்பல் வாணிகத்தை முறியடிக்க, ‘சுதேசி நாவாய்ச் சங்கம்’ என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளுக்காக 1908-இல் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டு செக்கிழுக்க வைக்கப்பட்டார்” என்பதை முதலமைச்சர் நினைவுகூர்ந்துள்ளார். திமுக அரசு வ.உ.சி.யை பல்வேறு வகைகளில் போற்றி வருவதாக தெரிவித்திருக்கும் அவர், 150-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது, 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையுடன் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது, சிலைகள் திறக்கப்பட்டன, நூல்கள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டன என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், “செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யை வணங்கிப் போற்றுகிறேன், வாழ்க வ.உ.சி.” எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
