tamilnadu

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி புறக்கணிப்பு 40 ஆயிரம் வருவாய்த் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம்

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி புறக்கணிப்பு 40 ஆயிரம் வருவாய்த் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம்

சென்னை, நவ.18 - வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் உள்ள பணி நெருக்கடிகள், கூடுதல் நிதி ஒதுக்கப்படாமை மற்றும் ஆய்வுக் கூட்டங்கள் என்ற பெயரில் அலைக்கழிக்கப்படுவதைக் கண்டித்து, சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வருவாய்த் துறை ஊழியர்கள் நவம்பர் 18 முதல் அப்பணியைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இப்பணியில் ஈடுபட்டுள்ள வருவாய்த் துறை, சத்துணவு, அங்கன்வாடி, ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இரவு 11 மணிக்குப் பிறகும் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டியுள்ளதால், குறிப்பாகப் பெண் ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். ஊழியர்களின் கோரிக்கை: பணியை மேற்கொள்ள உரிய கால அவகாசமும், முறையான பயிற்சியும் வழங்கப்படவில்லை என்றும், இப்பணியை அவசரக் கதியில் நடைமுறைப்படுத்துவதாகவும் ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாகப் பேசிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் பாஸ்கரன், ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளைத் தமிழகத் தேர்தல் ஆணையம் ஏற்று, திட்டமிடல் இல்லாமல் குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் இப்பணிக்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கிடையில், போராட்ட நாட்களில் பணிக்கு வராதவர்களின் சம்பளம் பிடிக்கப்படும் என்றும், பகுதிநேர ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என்றும் தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்தார். எனினும், இதைத் தொடர்ந்து வருவாய்த் துறை மாநிலச் செயலாளரின் வழிகாட்டுதலின்படி, சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று சில உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.