ஒன்றிய அரசின் 2024 -2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் குறித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாட்டிற்கு அறிவிப்பு ஏதும் இல்லை…
வழக்கமாகச் சொல்லும் திருக்குறள் உட்பட…
பட்ஜெட்டில் ஆரவாரமான அறிவிப்புகள்
ஆனால் எங்கே இருந்து நிதி ஆதாரங்கள் என்பதே கேள்வி!
உலகம் முழுவதும் செல்வ வரி, வாரிசுரிமை வரி, கார்ப்பரேட் வரி உயர்வுகள் பற்றிய விவாதம்.
ஆனால் இந்திய பட்ஜெட்டில் அன்னிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டுகிற கார்ப்பரேட் வரி குறைப்பு. தேசியம் பேசுகிற அரசாங்கத்தின் அளவற்ற அன்னிய பாசம்.
______________
விவசாயிகளுக்கு விளைச்சல் செலவினத்தை விட 50 சதவீதம் கூடுதலாக குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் என நிதியமைச்சர் அறிவிப்பு.
மறைந்த விவசாய அறிஞர் எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைத்த C 2 + 50% ஆ அரசால் தரப்படுகிறது? பதினோராவது ஆண்டாக ஆட்சியில் தொடர்கிற நீங்கள் இப்போதும் இந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் கடந்து போகிறீர்களே இது ஏமாற்று அல்லவா!
____________
4 கோடி வேலை வாய்ப்பு என்று அதிரடியாய் அறிவிப்பு.
2014இல் 10 கோடி என்று அறிவித்த அதிரடி என்ன ஆனது! உங்கள் அதிரடி அறிவிப்பு எல்லாம் இந்திய இளைஞர்களின் எதிர்பார்ப்பில் பேரிடியாக மாறியது தானே அனுபவம்! உங்கள் 4 கோடி அறிவிப்பில் "பக்கா" வேலை எவ்வளவு? "பக்கோடா வேலை" எவ்வளவு?
____________
இந்திய வளர்ச்சி "பளிச்சிடும் முன்னுதாரணம்" என்று தங்களுக்கு தானே பாராட்டி கொள்ளும் அரசே!
உலகின் அதிகமான ஏற்றத் தாழ்வு கொண்ட தேசம் இந்தியாதான் என்ற சாதனையே உங்கள் வளர்ச்சியின் குணம் என்பதை சொல்ல மறந்து விட்டீர்களே! வளர்ச்சி யாருக்கு... பில்லியனர்களுக்கா? ஏழை, நடுத்தர மக்களுக்கா?
____________
500 பெரிய நிறுவனங்களில் தொழில் பயிற்சி பெற இளைஞர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று அறிவிப்பு.
இந்த 500 பெரிய நிறுவனங்களில் எவ்வளவு வேலை வாய்ப்புகள் கடந்த 10 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது?
ஆண்டு வாரியாக எவ்வளவு வேலை வாய்ப்புகள் உயர்ந்தன? டாப் 100 நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் உயரவே இல்லை என தொழிலதிபர் சுனில் பாரதி மிட்டல் கூறினாரே! அந்த நிலைமை மாறிவிட்டதா?
இன்டர்ன்ஷிப் பெறுபவர்கள் அங்கே வேலைவாய்ப்பு பெறுவார்களா? இல்லை அவர்களின் வேலையை மலிவான ஊதியத்திற்கு வாங்குகிற ஏற்பாடா?
____________
பீகார் ஆந்திரா சிறப்பு திட்டங்கள் அறிவிப்பு...
10 ஆண்டுகளாக எவ்வளவு புறக்கணித்தீர்கள் என்பதன் ஒப்புதலா? உங்கள் அரசை இழுக்கும் இரட்டை என்ஜின்களை கழட்டி விடும் வரை இப்படிப்பட்ட அறிவிப்புகள் வெளிவருமோ!
____________
தமிழ்நாட்டுக்கு அறிவிப்பில் ஏதும் இல்லையே!
நிதியமைச்சரே வழக்கமாக மேற்கோள் காட்டும் திருக்குறளும் இல்லையே!
____________
ஆதார தொழில் வளர்ச்சிக்காக மூலதன செலவு 11 லட்சம் கோடி என்று பட்ஜெட்டில் அறிவிப்பு.
ஆதார தொழில் வளர்ச்சிக்கு அமுத சுரபியாக உள்ள எல்.ஐ.சி யை பலப்படுத்துவோம் என்று அறிவிக்க வேண்டாமா?
எல்.ஐ.சியின் பங்கு விற்பனையை தொடர்ந்தால் ஆதார தொழில் வளர்ச்சிக்கு எங்கே இருந்து வரும் பணம்!