“எங்கள் கனவுகளுக்கும் விலை நிர்ணயிக்கப்படுகிறது” - என கண்களில் நீர் மல்க கூறுகிறார் அதுல் குமார். கூலித்தொழிலாளியின் மகனான இவர், ஐஐடி தன்பாத்தில் இடம் கிடைத்தும் ரூ. 17 ஆயிரத்து 500 கட்டணம் கட்ட முடியாமல் தவித்தார். உச்ச நீதிமன்றம் அரசியலமைப் பின் 142-ஆவது பிரிவின் கீழ் அசாதாரண அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரது கல்விக் கனவைக் காப்பாற்றியது. ஆனால், எத்தனையோ அதுல் குமார்களின் கனவுகள் தினமும் சிதைக்கப்படுகின்றன. “ஆத்மநிர்பர் பாரத்” என்ற பெயரில் கல்வி நிறுவனங்கள் தன்னிறைவு பெற வேண்டும் என்கிறது ஒன்றிய அரசு. ஆனால் யாருடைய நிதியில்? இதன் விளைவு, 2016-ல் ஐஐடி-களில் கட்டணம் மூன்று மடங்காக உயர்ந்தது. ரூ. 90 ஆயிரத்தில் இருந்த கட்டணம் ரூ. 3 லட்சம் என்ற உச்சத்திற்குச் சென்றது. அதனுடன் ஏழை மாணவர்களின் கனவுகளும் சேர்ந்து பறந்து விட்டன. “உலகத்தரம் வாய்ந்த கல்விக்கு இந்தக் கட்டணம் அவசியம்” என்கிறார்கள் பல்கலைக்கழக அதிகாரிகள். “ஆனால் அந்த உலகத்தரம் யாருக்காக?” என்கிறார் ஒரு கல்வி யாளர். “கட்டண உயர்வால் பாதிக்கப்படும் மாணவர்களை கணக்கில் எடுத்துக் கொள்கிறீர்களா?” என்பது தான் அவரது கேள்வி. “கடன் வாங்கிப் படிக்கலாம்” என்கிறார்கள். ஆனால் கடனின் சுமையும், வட்டியின் பாரமும் தாங்க முடியாமல் எத்தனையோ மாணவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்து கின்றனர். கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் ஒன்றிய பல்கலைக்கழகங்கள், ஐஐடி மற்றும் ஐஐஎம்-களில் (Indian Institutes of Technology, Indian Institutes of Mana gement) இருந்து 13 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பட்டியல் வகுப்பினர் - பழங்குடி யினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட (SC, ST, OBC) மாணவர்கள் இடைநின்றுள்ளனர். இந்த மாணவர்களின் இடைநிற்றல் ஒவ்வொன்றையும், ஒரு குடும்பத்தின் கனவு சிதைந்ததாகவே நாம் கொள்ள முடியும். “சுதந்திரத்திற்கு முன் பள்ளிக்கூடத்திற்கு உள்ளேயே நுழைய முடியாதபடி வாசலில் நிறுத்தி வைத்தார்கள். இன்று அதையே மறைமுகமாக கட்டணச் சுவர் எழுப்பி நிறுத்து கிறார்கள்” என்கிறார் ஒரு சமூக ஆர்வலர். கல்விக்கான வாய்ப்பு, வசதி களை ஏற்படுத்தித் தருவதில், மாநி லங்களுக்கிடையே பெரும் வேறு பாடுகள் உள்ளன. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் கல்வி உதவித்தொகை திட்டங் கள் சிறப்பாக செயல்படுத்தப்படு கின்றன. ஆனால் உத்தரப்பிர தேசம், பீகார் போன்ற மாநிலங் களில் நிலைமை மோசமாக உள்ளது. “ஒரே நாட்டில் இப்படி வேறுபாடுகள் இருப்பது ஏன்?” என்கிறார்கள் கல்வியாளர்கள். வித்யாலட்சுமி போன்ற திட்டங்கள் இருந்தாலும், அவை போதுமானதாக இல்லை. “கல்வி என்பது அடிப்படை உரிமை. அது வியாபாரப் பொருளாக மாற்றப் படக்கூடாது” என்று கவலையுடன் கூறுகின்றனர். மறுபுறத்தில் உயர் கல்வி நிறு வனங்களில் சாதியப் பாகுபாடு இன்னும் ஆழமாக வேரூன்றி யுள்ளது. ஐஐடி-களில் 95 சதவிகித பேராசிரியர்கள் உயர்சாதியினர். 24 துறைகளில் ஒரு தலித் பேராசிரியர் கூட இல்லை. ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில், “எங்கள் உடை, பேச்சு வழக்கு எல்லாமே கேலிக் குரியதாக பார்க்கப்படுகிறது” என்கிறார் ஒரு மாணவர். இவ்வாறு ஏற்படுத்தப்படும் மன உளைச்சல் காரணமாக மட்டுமே கடந்த 7 ஆண்டுகளில் 122 மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
அரசியலமைப்பு வழங்கிய கல்வி உரிமை, சமத்துவ உரிமை, இட ஒதுக்கீடு எல்லாம் காகிதத்தில் மட்டுமே என்கின்றனர் பலர். வேலை வாய்ப்பிலும் பாகுபாடு தொடர்கிறது. 2024-ல் வெளி யான தகவலின்படி, 23 ஐஐடி வளாகங்களில் 8,000 மாணவர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கின்ற னர். “படித்து முடித்தாலும் எங்கள் சாதிப் பெயர் எங்களை துரத்து கிறது” என்கிறார்கள் பலர். தனி யார் துறையில் “கலாச்சார பொருத்தம்” என்ற பெயரில் மறைமுக பாகுபாடு காட்டப்படு வதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. நகர்ப்புற சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டி தூய்மைப் பணியாளர்களில் 92 சதவிகிதம் பேர் பட்டியல் வகுப்பினர் - பழங்குடியி னர், இதர பிற்படுத்தப்பட்ட (SC - ST, OBC) பிரிவினர் என்பது அதிர்ச்சி தரும் உண்மை. “எங்கள் குழந்தைகளாவது கல்வி மூலம் மேல் வர வேண்டும் என்று கனவு காண்கிறோம். ஆனால் அந்த கனவுக்கும் விலை நிர்ணயிக்கப்படுகிறது” என்கிறார் ஒரு தூய்மைப் பணியாளர். இந்த நிலை மாற வேண்டுமானால்: - கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் - சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு உதவித்தொகை திட்டங்கள் வேண்டும் - கல்வி நிறுவனங்களில் பன்முகத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் - தனியார் துறை வேலை வாய்ப்பில் பாகுபாட்டை தடுக்க சட்டங்கள் வேண்டும். “கல்வி மட்டுமே எங்களை மேம்படுத்தும் ஆயுதம். அந்த ஆயுதத்தை எங்களிடமிருந்து பறிக்க முயற்சிக்கிறார்கள்” என்கி றார் ஒரு தலித் மாணவர். அவரது குரலில் சோகமும் போராட்ட உணர்வும் கலந்திருக்கிறது. அந்த குரல் கேட்கப்பட வேண்டும். அரசியலமைப்பின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். மாற்றம் நடக்க வேண்டும். பெங்களூரு அல்லயன்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் சுமந்த் குமார் ‘தி இந்து’ ஏட்டில் டிசம்பர் 28 அன்று எழுதிய கட்டுரை. தமிழ்ச் சுருக்கம்: ஆசிரியர் செல்லதுரை, உடுமலைப்பேட்டை
தலித் மாணவர்களின் கல்விச் சவால்கள்
உயரும் கல்விக் கட்டணங்கள்
ஐஐடி நிறுவனங்கள்:
- 2016-க்குப் பிறகு கட்டணம் 200% உயர்வு
- ரூ. 90,000-லிருந்து ரூ. 3 லட்சமாக அதிகரிப்பு
- ஐஐடி தில்லியில் எம்.டெக். கட்டணம் 100% உயர்வு (ரூ. 26,450-லிருந்து ரூ. 53,100)
ஐஐஎம் நிறுவனங்கள்:
- லக்னோ: 29.6%
- கொல்கத்தா: 17.3%
- கோழிக்கோடு: 23.1%
- ராஞ்சி: 19% - திருச்சி: 20%
- அகமதாபாத் & ஷில்லாங்: 5%
கடந்த 5 ஆண்டுகளில் இடைநிற்றல்
மத்திய பல்கலைக்கழகங்கள்:
- ஓபிசி : 4,596 மாணவர்கள்
- எஸ்சி : 2,424 மாணவர்கள்
- எஸ்டி : 2,622 மாணவர்கள்
ஐஐடி நிறுவனங்கள்:
- ஓபிசி : 2,066 மாணவர்கள்
- எஸ்சி : 1,068 மாணவர்கள்
- எஸ்டி : 408 மாணவர்கள்
ஐஐஎம் நிறுவனங்கள் :
- ஓபிசி : 163 மாணவர்கள்
- எஸ்சி : 188 மாணவர்கள்
- எஸ்டி : 91 மாணவர்கள்
சாதி அடிப்படையிலான பாகுபாடு
- பேராசிரியர் பணியிடங்களில் 95% உயர்சாதியினர்
- 24 துறைகளில் ஒரு எஸ்.சி. பேராசிரியர் கூட இல்லை
- 15 துறைகளில் ஒரு எஸ்.டி. பேராசிரியர் கூட இல்லை
- 9 துறைகளில் ஒரு ஓபிசி பேராசிரியர் கூட இல்லை
122 மாணவர்கள் தற்கொலை
சாதி அடிப்படையிலான பாகுபாடு - அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக கடந்த 7 ஆண்டுகளில் ஐஐடி மற்றும் ஐஐஎம்-களில் 122 மாணவர்கள் தற்கொலை
வேலைவாய்ப்பிலும் புறக்கணிப்பு
2024-ல் வெளியான ஆர்டிஐ (RTI) தகவலின்படி, 23 ஐஐடி வளாகங்களில் எஸ்சி, எஸ்டி,
ஓபிசி மாணவர்கள் சுமார் 8,000 பேர் (38%) வேலைவாய்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை.